தூத்துக்குடியில் பயங்கரம்: கண்ணில் மிளகாய்பொடி தூவி காண்டிராக்டர் வெட்டிக்கொலை


தூத்துக்குடியில் பயங்கரம்: கண்ணில் மிளகாய்பொடி தூவி காண்டிராக்டர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 23 Sep 2020 4:41 AM GMT (Updated: 2020-09-23T10:11:03+05:30)

தூத்துக்குடியில் கண்ணில் மிளகாய்பொடி தூவி காண்டிராக்டர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தொழில் போட்டியில் தீர்த்துக்கட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி சில்வர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 42), காண்டிராக்டர். இவரும், அதே பகுதியை சேர்ந்த ஜார்ஜ் (45) என்பவரும் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பர்னிச்சர் தயாரிக்கும் கம்பெனியில் மரச்சாமான்களுக்கு பாலீஸ் போடும் பணியை ஒப்பந்த அடிப்படையில் செய்து வந்தனர். இவர்களுக்கு இடையே அடிக்கடி தொழில் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நிறுவன உரிமையாளர், ஜார்ஜூக்கு பணி கொடுக்காமல் நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஜார்ஜூக்கும், நந்தகுமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. அடிக்கடி அவர்கள் சந்திக்கும்போது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஜார்ஜ், நந்தகுமாரை கொலை செய்ய முடிவு செய்தார்.

வெட்டிக்கொலை

நேற்று காலையில் சில்வர்புரம் பகுதியில் ஜார்ஜ், அவருடைய உறவினர் விளாத்திகுளம் வேடப்பட்டியைச் சேர்ந்த இளையராஜா (39) என்பவருடன் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு நந்தகுமார் மோட்டார் சைக்கிளில் வந்தார். உடனே ஜார்ஜ் மோட்டார் சைக்கிளை வழிமறித்தார்.

நந்தகுமார் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும், ஜார்ஜ் தான் மறைத்து வைத்து இருந்த மிளகாய் பொடியை அவரது கண்ணில் வீசினார். இதில் நிலைகுலைந்த நந்தகுமாரை, ஜார்ஜ், இளையராஜா ஆகியோர் அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த நந்தகுமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

2 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, சிப்காட் இன்ஸ்பெக்டர் முத்துசுப்பிரமணியன், தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் நந்தகுமாரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பயங்கர கொலை குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜார்ஜ், இளையராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தொழில் போட்டியில் பர்னிச்சர் கம்பெனி காண்டிராக்டர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story