களக்காடு அருகே தோட்டத்தில் புகுந்து காட்டு யானை அட்டகாசம் வாழைகள் சேதம்


களக்காடு அருகே தோட்டத்தில் புகுந்து காட்டு யானை அட்டகாசம் வாழைகள் சேதம்
x
தினத்தந்தி 23 Sep 2020 10:03 PM GMT (Updated: 23 Sep 2020 10:03 PM GMT)

களக்காடு அருகே தோட்டத்தில் புகுந்து காட்டு யானை அட்டகாசத்தில் ஈடுபட்டது. இதில் வாழைகள் சேதம் அடைந்தன.

களக்காடு,

நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவைகள் அடிக்கடி விளைநிலங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்து சேதத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த நிலையில் களக்காடு தலையணை அருகே புதுக்குளம் பகுதியில் உள்ள வாழை தோட்டங்களுக்குள் நேற்று அதிகாலையில் ஒற்றை காட்டு யானை புகுந்தது. அங்குள்ள வாழை மரங்களை சரித்து சேதப்படுத்தியது. இதில் ஏராளமான வாழைகள் சேதம் அடைந்தன. அதிகாலையில் தோட்டங்களுக்கு சென்ற விவசாயிகள், அங்கு சாலையில் நின்ற ஒற்றை காட்டு யானையை பார்த்து அதிர்ச்சி அடைந்து திரும்பி தப்பி ஓடி வந்தனர்.

வாழை தோட்டத்தில் யானை புகுந்து சேதப்படுத்தியதில், முத்துவேலுக்கு (வயது 47) சொந்தமான சுமார் 60 வாழைகளும், முத்துகிருஷ்ணனுக்கு (65) சொந்தமான சுமார் 50 வாழைகளும் சேதம் அடைந்தன.

சம்பவ இடத்தை களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் (பொறுப்பு) இளங்கோ, வனச்சரகர் பாலாஜி மற்றும் வனத்துறையினர் பார்வையிட்டு, யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.

சேதம் அடைந்த வாழை மரங்களை கணக்கிட்டு, உரிய இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story