வியாபாரி கொலை வழக்கு ஆவணங்கள் ஒப்படைப்பு: தட்டார்மடத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு


வியாபாரி கொலை வழக்கு ஆவணங்கள் ஒப்படைப்பு: தட்டார்மடத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு
x
தினத்தந்தி 23 Sep 2020 11:30 PM GMT (Updated: 23 Sep 2020 10:11 PM GMT)

வியாபாரி கொலை வழக்கு தொடர்பாக தட்டார்மடத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று விசாரணை தொடங்கினர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்தனர்.

நெல்லை,

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்வன் (வயது 32). தண்ணீர் கேன் வியாபாரியான இவர் கடந்த 17-ந் தேதி சொத்து பிரச்சினை காரணமாக, காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், அ.தி.மு.க. தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் திருமணவேல் உள்பட சிலர் மீது நெல்லை மாவட்டம் திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக முத்துராமலிங்கம், சின்னத்துரை, ராமன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருமணவேல், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன் ஆகிய 2 பேர் சென்னை கோர்ட்டில் சரண் அடைந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து திசையன்விளை போலீஸ் நிலையத்தில் பதிவு செய்து இருந்த கொலை வழக்கு தொடர்பான 175 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பிரகாஷ், திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் ஆகியோர் நேற்று காலையில் நெல்லை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமாரிடம் ஒப்படைத்தனர்.

அனைத்து ஆவணங்களையும் பெற்று கொண்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார், இதுதொடர்பாக புதிதாக கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதற்காக தலா 5 போலீசார் கொண்ட 6 குழுக்கள் அமைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு இடங்களுக்கும் சென்று விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து மாலையில் சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பிறைசந்திரன், தேவி, உலகராணி உள்ளிட்டோர் தலைமையிலான குழுவினர் திசையன்விளை போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த, செல்வன் கொலைக்கு பயன்படுத்திய காரை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

செல்வனின் மோட்டார் சைக்கிளின் மீது காரை மோதவிட்டதில், காரின் முன்பகுதி சேதம் அடைந்து இருந்தது. காரின் சேதமடைந்த பாகங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தரிடமும் விசாரணை நடத்தினர்.

பின்னர் செல்வன் காரில் கடத்தப்பட்ட தட்டார்மடம் அருகே கொழுந்தட்டு நாலுமுக்கு ரோடு பகுதிக்கு சென்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். செல்வனின் மோட்டார் சைக்கிளில் காரை மோத விட்டு, அவரை தூக்கி கடத்தி சென்றது, அங்குள்ள முருங்கைக்காய் கமிஷன் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. எனவே, அந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, அவற்றை பெற்றுக்கொண்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார், அங்குள்ள கடைக்காரர்கள், பொதுமக்களிடம் விசாரித்து, வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

செல்வனின் மோட்டார் சைக்கிளில் மோதிய காரானது அங்குள்ள மினி டேங்கர் லாரியையும் இடித்து தள்ளியது. எனவே, சேதம் அடைந்த அந்த மினி லாரியையும் பார்வையிட்டு, தடயங்களை சேகரித்தனர். பின்னர் செல்வனின் உடல் வீசப்பட்ட திசையன்விளை அருகே கடக்குளம் காட்டு பகுதிக்கும் சென்று, சி.பி.சி.ஐ.டி. போலீசார் பார்வையிட்டு, அப்பகுதியினரிடம் விசாரித்தனர்.

தொடர்ந்து சொக்கன்குடியிருப்புக்கு சென்று செல்வனின் குடும்பத்தினரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வாக்குமூலத்தை பதிவு செய்தனர். மேலும், செல்வன் கொலை தொடர்பாக கைதான 3 பேர் மற்றும் கோர்ட்டில் சரண் அடைந்த 2 பேர் ஆகிய 5 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னரே இந்த வழக்கில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்படுவாரா? என்பது தெரியவரும்.

ஒரே நாளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று அதிரடியாக விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story