மத்திய அரசை கண்டித்து சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Sept 2020 6:02 AM IST (Updated: 24 Sept 2020 6:02 AM IST)
t-max-icont-min-icon

சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் பொன்முடி தலைமை தாங்கினார்.

சென்னை,

மத்திய அரசின் தொழிலாளர் திருத்த சட்டங்களை கண்டித்து சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் பொன்முடி தலைமை தாங்கினார். செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் மகா சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் துரைப்பாண்டியன் கலந்துகொண்டார்.

ஆர்ப்பாட்டத்தின்போது பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசின் தொழிலாளர் திருத்த சட்டம் தொழிலாளர்களுக்கு விரோதமானது. அதேபோல பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச அரசும் தயாராகவே இல்லை. கொரோனா கால நிவாரணம் இன்னும் முழுமையாக தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

எனவே மேற்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதுடன் நலவாரியத்தில் உறுப்பினராவதற்கு ஆதார் அட்டையை சான்றாக ஏற்றுக்கொள்ள வேண்டும். கூட்டுறவு வங்கிகள் மூலம் ஆட்டோ தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் கடன் வழங்கவேண்டும். மாவட்ட கண்காணிப்பு கூட்டங்களை முறையாக நடத்த வேண்டும். நிறுத்தப்பட்ட பென்சனை நிலுவைத்தொகையுடன் வழங்க வேண்டும். அனைத்து ஆட்டோ டிரைவர்களுக்கும் மாதம் ரூ.7,500 வீதம் ஆறு மாதங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களிடம் கட்டாய கடன் வசூல் செய்யும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதே கோரிக்கைகளுடன், சமீபத்தில் சென்னை மாநகராட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்த்திட வலியுறுத்தியும் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் சென்டிரல் மூர்மார்க்கெட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story