குளித்தலை பெரியார் நகரில் உள்ள நுண் உர செயலாக்க மையத்திற்கு பூட்டு போடும் போராட்டம்


குளித்தலை பெரியார் நகரில் உள்ள நுண் உர செயலாக்க மையத்திற்கு பூட்டு போடும் போராட்டம்
x
தினத்தந்தி 24 Sep 2020 2:18 AM GMT (Updated: 24 Sep 2020 2:18 AM GMT)

குளித்தலை பெரியார் நகரில் உள்ள நுண் உர செயலாக்க மையத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என குளித்தலை பகுதி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பினர் சமூக வலை தளங்களில் பரப்புவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் பகுதியில், நுண் உர செயலாக்க மையம் உள்ளது. இந்த இடத்தில் தினந்தோறும் குப்பைகளை கொட்டி தரம் பிரித்து வருகின்றனர். இந்த நுண் உர செயலாக்க மையத்தில் இருந்து, இதை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாகவும், ஈக்கள், கொசுக்கள் அதிக அளவில் இருப்பதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும், சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு மூச்சு திணறலும் ஏற்படுவதாகவும், இதனால் இப்பகுதியில் குடியிருக்க முடியாதநிலை இருப்பதாக இப்பகுதி மக்கள் தொடர்ந்து தெரிவித்துவந்தனர்.

மேலும் இந்த நுண் உர செயலாக்க மையத்தை குடியிருப்புகள் இல்லாத, நகராட்சிக்கு சொந்தமான வேறு இடத்திற்கு மாற்றி அமைக்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்தநிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி குளித்தலை பகுதி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பினர் மற்றும் பெரியார் நகர் பகுதி மக்கள் சார்பில் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டும், சில போராட்டங்களும் நடத்தப்பட்டன.

பூட்டு போடும் போராட்டம்

ஆனால் இப்பிரச்சினை தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் உரிய முடிவு எட்டப்படாமல் இருந்துவருகிறது. இந்தநிலையில், பெரியார் நகரில் உள்ள நுண் உர செயலாக்க மையத்தை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, இம்மாதம் 29 -ந்தேதி அந்த நுண்உர செயலாக்க மையத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக, குளித்தலை பகுதி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் முகநூல் மற்றும் வாட்ஸ்அப் போன்றவற்றில் போராட்ட அறிவிப்பு தகவல் வெளியிட்டப்பட்டுள்ளது.

இது குளித்தலை பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நுண் உரகிடங்கை இடமாற்றம் செய்வது தொடர்பாக, தொடர்ந்து ஏற்பட்டுவரும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகான, அதிகாரிகள் கலந்தாலோசித்து உரிய முடிவு எடுக்கவேண்டும் என்பதே அனைத்துதரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

Next Story