9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை அதிக நேரம் செல்போன் பார்த்ததை தந்தை கண்டித்ததால் விபரீதம்


9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை அதிக நேரம் செல்போன் பார்த்ததை தந்தை கண்டித்ததால் விபரீதம்
x
தினத்தந்தி 24 Sept 2020 7:51 AM IST (Updated: 24 Sept 2020 7:51 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் அதிக நேரம் செல்போன் பார்த்ததை தந்தை கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி,

திருச்சி பீமநகர் ரெட்டி தெருவை சேர்ந்தவர் கேசவன். தனியார் ஹார்டுவேர்ஸ் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் வைஷ்ணவி (வயது 14). இவர் திருச்சி மேலப்புதூரில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

கொரோனா பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக தற்போது பள்ளிகள் மூடப்பட்டு இருக்கிறது. ஆனாலும் ஆன்-லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவி வைஷ்ணவியும் ஆன்-லைன் வகுப்பு மூலம் படித்து வந்தார்.

தற்கொலை

இதற்காக வைஷ்ணவிக்கு அவரது தந்தை புதிதாக ஒரு ஸ்மார்ட் செல்போன் வாங்கி கொடுத்து இருந்தார். ஆனால் அந்த செல்போனில் வைஷ்ணவி ஆன்-லைன் வகுப்பு தவிர அதிக நேரம் பார்த்துக் கொண்டே இருந்தாராம். இதை அவரது தந்தை கண்டித்தார். இதனால் மனமுடைந்த வைஷ்ணவி கடந்த 18-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வைஷ்ணவி நேற்று முன்தினம் நள்ளிரவு இறந்தார். இதுபற்றி பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story