கடன் தொகையை கையாடல் செய்ததாக கூறி கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட சுய உதவிக்குழு பெண்கள்


கடன் தொகையை கையாடல் செய்ததாக கூறி கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட சுய உதவிக்குழு பெண்கள்
x
தினத்தந்தி 24 Sep 2020 2:25 AM GMT (Updated: 24 Sep 2020 2:25 AM GMT)

தொட்டியம் அருகே கடன் தொகையை கையாடல் செய்ததாக கூறி கூட்டுறவு கடன் சங்கத்தை மகளிர் சுய உதவிக்குழுவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொட்டியம்,

தொட்டியம் அருகே உள்ள திருநாராயணபுரத்தில் ஆர்.1618-வரதராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்தில் திருநாராயணபுரம், அரசலூர், வரதராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கணக்கு தொடங்கி வரவு-செலவு செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. தற்போது அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் நேற்று கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்திற்கு வந்து நாங்கள் கடன் வாங்காமலேயே கடன் வாங்கியதாக எங்களது கணக்கில் உள்ளதால் கணக்கை முடக்கி வைத்துள்ளனர். எங்களது பெயரில் கடன்களைப் பெற்று கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி திடீரென கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவலறிந்த திருச்சி கூட்டுறவு செயலாட்சியர் ஞானசேகரன், தொட்டியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார், அரசலூர் ஊராட்சி தலைவர் சஞ்சீவி மற்றும் அதிகாரிகள் மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சேமிப்பு கணக்கில் கூட பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளதால் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு பதிலளித்த அதிகாரி இன்னும் ஒரு மாத காலத்துக்குள் கணக்கு தணிக்கை செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றதும் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story