2 ஆண்டுகளுக்கு பிறகு குரங்கணி-டாப் ஸ்டேசன் மலைப்பாதையில் வாகன போக்குவரத்து வனத்துறையினர் முடிவு


2 ஆண்டுகளுக்கு பிறகு குரங்கணி-டாப் ஸ்டேசன் மலைப்பாதையில் வாகன போக்குவரத்து வனத்துறையினர் முடிவு
x
தினத்தந்தி 24 Sep 2020 4:33 AM GMT (Updated: 24 Sep 2020 4:33 AM GMT)

2 ஆண்டுகளுக்கு பிறகு, குரங்கணி-டாப் ஸ்டேசன் மலைப்பாதையில் வாகன போக்குவரத்தை தொடங்க வனத்துறையினர் அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளனர்.

போடி,

போடி அருகே குரங்கணி, டாப் ஸ்டேசன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. குரங்கணி-டாப் ஸ்டேசன் இடையே 17 கி.மீ. மலைப்பாதை உள்ளது. இங்கு போதிய சாலை வசதி கிடையாது. அந்த பாதையில் ஜீப் மட்டுமே சென்று வர முடியும். இந்த மலைப்பாதையில் முதுவாக்குடி என்ற இடத்தில் வனத்துறை சோதனைச்சாவடி அமைந்துள்ளது.

இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு குரங்கணியில் ஏற்பட்ட காட்டு தீயில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர். இதனால் அந்த சோதனைச்சாவடி மூடப்பட்டது. அதன்பிறகு வாகன போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது.

இதனால் கல்வி, மருத்துவ வசதிக்காகவும், விவசாயிகள் தங்களது விளைபொருட்கள் மற்றும் இடுபொருட்களை கொண்டு செல்லவும் சோதனைச்சாவடியை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்த போவதாக 5 மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.

வாகன போக்குவரத்துக்கு அனுமதி

இந்தநிலையில் குரங்கணி- டாப் ஸ்டேசன் இடையே மலைப்பாதையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் வாகன போக்குவரத்தை தொடங்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இது குறித்து மாவட்ட வன அலுவலர் எஸ்.கவுதம் கூறும்போது, குரங்கணி-டாப் ஸ்டேசன் இடையே உள்ள மலைப்பாதையில் விரைவில் வாகன போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும். இந்த மலைப்பாதை வழியாக செல்லும் வாகனங்கள், வனத்துறை சோதனைச்சாவடியில் உரிய அனுமதி பெற்று, விதிமுறைகளுக்கு உட்பட்டு சென்று வர வேண்டும் என்றார்.

Next Story