நிதிநிறுவனம் நடத்தி ரூ.100 கோடி மோசடி: விசாரணை அதிகாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


நிதிநிறுவனம் நடத்தி ரூ.100 கோடி மோசடி: விசாரணை அதிகாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 24 Sep 2020 4:37 AM GMT (Updated: 24 Sep 2020 4:37 AM GMT)

நிதி நிறுவனம் நடத்தி ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கு தொடர்பாக, விசாரணைக்கு சென்ற போலீஸ் அதிகாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தமபாளையம்,

உத்தமபாளையத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்ட தனியார் நிதி நிறுவனத்தில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணத்தை முதலீடு செய்தனர். மேலும் அந்த நிதிநிறுவனம் சார்பில் ஏலச்சீட்டும் நடத்தப்பட்டது. அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக அஜிஸ் கான், ஜமால் ஆகியோர் இருந்தனர். இதில், அஜிஸ் கான் கடந்த மாதம் இறந்து விட்டார்.

இந்த நிலையில் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக வட்டி வழங்கவில்லை. மேலும் அலுவலகமும் திடீரென மூடப்பட்டது. இதனால் நிதிநிறுவனத்தில் முதலீடு செய்தோர், ஏலச்சீட்டில் பணம் செலுத்தியோர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள், தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதில், முதலீடு மற்றும் ஏலச்சீட்டு மூலம் அந்த நிதிநிறுவனம் ரூ.100 கோடி வரை மோசடி செய்திருப்பதாக குறிப்பிட்டிருந்தனர். இந்த மனுக்கள் திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

முற்றுகை போராட்டம்

இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி நேற்று உத்தமபாளையத்துக்கு வந்தார். அங்குள்ள தேரடி வீதியில் வைத்து, பணத்தை இழந்த பொதுமக்களிடம் விசாரணை நடத்தி கொண்டிருந்தார். அப்போது 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது, பணமோசடியில் ஈடுபட்ட ஜமால் என்பவர் அவரது வீட்டில் இருப்பதாகவும், அவர் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதற்கிடையே விசாரணை அதிகாரி நாகலட்சுமி, இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசாரை திடீரென முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தனித்தனியாக திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதன்பேரில், போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அந்த நிதிநிறுவனத்தில், அரசு ஊழியர் தம்பதியினர் ரூ.1 கோடியே 60 லட்சம் முதலீடு செய்து ஏமாந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story