வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்


வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Sep 2020 5:52 AM GMT (Updated: 24 Sep 2020 5:52 AM GMT)

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகர்கோவில்,

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. கூட்டணி கட்சிகள் கூட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் தலைமை தாங்கினார். மாநகர தி.மு.க. செயலாளர் மகேஷ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் ஆஸ்டின் எம்.எல்.ஏ., எம்.ஜே.ராஜன், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், தவசிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் அகமது உசேன், முன்னாள் மாவட்ட செயலாளர் முருகேசன், மாநகர செயலாளர் மோகன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் திருமாவேந்தன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் நைனா முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தீர்மானம்

கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களை பாதிக்கும் வகையில் மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு நிறைவேற்றி உள்ள மூன்று மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தியும், அதற்கு துணை போகும் மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசை கண்டித்தும் கொரோனா பாதுகாப்பு விதிகளின்படி 28-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது-

ஒன்றியம், பேரூர்...

மத்திய அரசு விவசாயிகள் மற்றும் சிறுவணிகர்கள் பாதிக்கக்கூடிய வகையில் நிறைவேற்றியுள்ள 3 மசோ தாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் வருகிற 28-ந் தேதி காலை 10 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

இதேபோல் அனைத்து ஒன்றியங்கள் மற்றும் பேரூர்களிலும் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த ஒன்றிய தலைவர்கள், நகர தலைவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story