விக்கிரவாண்டி அருகே, ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்


விக்கிரவாண்டி அருகே, ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 24 Sep 2020 3:15 PM GMT (Updated: 24 Sep 2020 3:13 PM GMT)

விக்கிரவாண்டி அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

விக்கிரவாண்டி,

திண்டிவனம் தாலுகா நெடி,மோழியனூரில் ரெயில்வே துறை சார்பில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு சுரங்கப்பாதை அமைப்பதால் இவ்வழியாக கரும்பு லோடு மற்றும் விவசாய விளைபொருட்களை வாகனங்களில் ஏற்றிச்செல்ல முடியாது எனவும் தங்களுக்கு மேம்பாலம் அமைத்து தர வேண்டும் எனவும் நெடி, மோழியனூர் மற்றும் சுற்றுப்புறத்தை சேர்ந்த 15 கிராம மக்கள் வலியுறுத்தினர்.

மேலும் இங்கு நடைபெற்று வரும் சுரங்கப்பாதை பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து 15 கிராம மக்களும் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து தங்களுடைய ஆதார் அட்டை, ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கப்போவதாக போராட்டம் அறிவித்திருந்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நல்லசிவம், கணேசன், அஜய்தங்கம், இன்ஸ்பெக்டர் விஜி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயபாலன், ராஜாராம் மற்றும் அதிரடிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று கிராம மக்களை அவரவர் கிராமங்களிலேயே தடுத்து நிறுத்தினர்.

இதனிடையே காலை 9 மணியளவில் மோழியனூர் கிராம மக்கள், போராட்டம் நடத்த ரெயில்வே சுரங்கப்பாதையை நோக்கி திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது நடவடிக்கையாக பஸ்சில் ஏற்றினர். இதையறிந்த நெடி கிராம மக்கள், அந்த பஸ்சை மறித்து பொதுமக்களை கீழே இறக்கி விடுமாறு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு, கோஷம் எழுப்பினர்.

பின்னர் பஸ்சில் இருந்தவர்களை கீழே இறக்கி அவர்களை அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு திண்டிவனம் சப்-கலெக்டர் டாக்டர் அனு மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் விரைந்து வந்து மாசிலாமணி எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரமேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், பா.ம.க. நிர்வாகி சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சேரன், கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன், தொழிலதிபர் வெங்கடாஜலபதி, ஹோலி ஏஞ்சல் பள்ளி தாளாளர் பழனியப்பன் மற்றும் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் முடிவில் சுரங்கப்பாதை பிரச்சினை குறித்து மாவட்ட நிர்வாகம் மூலம் மாநில அரசிற்கு அறிக்கை அனுப்பி பின்னர் மாநில அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்க நடவடிக்கை எடுப்பது எனவும், சுரங்கப்பாதை பணி மத்திய அரசால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட பணி என்பதால் அதை தடுக்கக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாக கூறி பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story