ஈரோடு மாவட்டத்தில் 138 பேருக்கு தொற்று: கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது. புதிதாக 138 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், ஒருவர் பலியாகி உள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் முதல் கட்டமாக 70 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் ஒருவர் இறந்த நிலையில் 69 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு சென்றனர். அதன் பின்னர் மாவட்டத்தில் 35 நாட்களுக்கும் மேலாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருந்தது.
இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் 2-வது கட்டமாக கொரோனா தொற்று பரவ தொடங்கியது. தொடக்க காலத்தில் தினமும் 10 பேர் 20 பேர் என கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். அதைத்தொடர்ந்து தினமும் 50-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வந்தது. தற்போது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தினமும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
ஒருவர் பலி
இதற்கிடையில் ஈரோடு மாநகர் பகுதியை சேர்ந்த 77 வயது ஆண் ஒருவருக்கு சளி, காய்ச்சல் இருந்தது. இதைத்தொடர்ந்து பரிசோதனை செய்தபோது இவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அதன் பின்னர் அவர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 21-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.
138 பேருக்கு தொற்று
மேலும் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 138 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 29 ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் 123 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். தற்போது 1,129 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பெண் போலீசுக்கு பாதிப்பு
ஈரோடு மாவட்ட அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 42 வயது பெண் போலீஸ் ஒருவருக்கு கொரேனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இவருக்கு கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளதால் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். இதையொட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பிளீச்சிங் பவுடர் போடப்பட்டது.
மேலும் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story