ஈரோட்டில் தூக்குப்போட்டு தொழில் அதிபர் தற்கொலை - பங்கு சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் விபரீத முடிவு


ஈரோட்டில் தூக்குப்போட்டு தொழில் அதிபர் தற்கொலை - பங்கு சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 25 Sep 2020 12:19 AM GMT (Updated: 25 Sep 2020 12:19 AM GMT)

பங்கு சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் ஈரோட்டில் தொழில் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு, 

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து உள்ளன. இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், பங்கு சந்தை தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஈரோட்டை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஈரோடு பழையபாளையம் இந்திரா காந்தி வீதியை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 41). இவரது மனைவி பாக்கியலட்சுமி (39). இவர்களுக்கு குழந்தை இல்லை. நரசிம்மன் ஈரோடு சம்பத் நகர் பகுதியில் அலுவலகம் ஒன்றை தொடங்கி ஆன்லைனில் பல்வேறு நிறுவனங்களின் பங்குகளை வாங்கி விற்பனை செய்து வந்தார்.

கொரோனா ஊரடங்கால் கடந்த சில மாதங்களாக நரசிம்மன் வாங்கிய பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் விலை குறைய தொடங்கியது. இதனால் அவருக்கு சுமார் ரூ.15 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டது. அதனால் கடந்த சில நாட்களாக அவர் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டார். இந்த நிலையில் நரசிம்மன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.

உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் நரசிம்மன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story