விபத்தில் சேதமடைந்தவரின் முகத்தை பழைய நிலைக்கு மாற்றி அரசு டாக்டர்கள் சாதனை


விபத்தில் சேதமடைந்தவரின் முகத்தை பழைய நிலைக்கு மாற்றி அரசு டாக்டர்கள் சாதனை
x
தினத்தந்தி 25 Sept 2020 7:23 AM IST (Updated: 25 Sept 2020 7:23 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் சேதமடைந்தவரின் முகத்தை பழைய நிலைக்கு மாற்றி அரசு டாக்டர்கள் சாதனை படைத்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், வாண்டான்விடுதி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம்(வயது 55). இவர் கடந்த செப்டம்பர் மாதம் 13-ந் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி முக எலும்புகள் மற்றும் நெஞ்சக எலும்புகள் முறிவுடன் முகம் மாறிய நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து பழைய நிலைக்கு முகத்தை கொண்டு வந்து சாதனை படைத்தனர்.

இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பூவதி கூறியதாவது:-

விபத்தில் சிக்கிய பரமசிவத்தின் முக எலும்புகள் கடுமையாக சிதைவுற்று பற்கள் நேர்த்தியாக இல்லாத காரணத்தால் நீர் அருந்தவோ, உணவு உண்ணவோ முடியவில்லை. மேலும் வாயை திறக்கவோ, சரியாக பேசவோ அவரால் இயலவில்லை. அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், அவரது உடலில் உள்ள சர்க்கரை அளவை இன்சுலின் மூலம் குறைத்து முக சீரமைப்பு அறுவை சிகிச்சைகள் இரண்டு கட்டமாக மேற்கொள்ளப்பட்டது.

எலும்புகள் இணைப்பு

முதற்கட்டமாக மூன்றாக உடைந்த மேல்தாடை எலும்பை கம்பிகள் கொண்டு கட்டி ஒன்றாக்கி அதனை கன்ன எலும்பு வளைவுடன் தொங்கு கம்பிகள் மூலம் இணைத்து பற்கள் கட்டி வைக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக உடைந்த மேல்தாடை முகப்பை தொங்கு கம்பிகள் மூலம் நாசியின் பக்கவாட்டு எலும்புகளுடன் கட்டப்பட்டு பழைய முக அமைப்புக்கு கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் அவரால் நீர் அருந்தவும், உணவுகளை கடித்து சாப்பிடவும் முடிகிறது. மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையினை மருத்துவ குழுவினர் வெற்றிகரமாக செய்து முடித்து சாதனை படைத்துள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். சாதனை படைத்த அரசு டாக்டர்கள் குழுவினரை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெகுவாக பாராட்டினார்.

Next Story