திருச்சியில் பல்வேறு அமைப்பினர் புதிய வேளாண் மசோதா நகல்களை எரித்து போராட்டம்


திருச்சியில் பல்வேறு அமைப்பினர் புதிய வேளாண் மசோதா நகல்களை எரித்து போராட்டம்
x
தினத்தந்தி 25 Sept 2020 7:42 AM IST (Updated: 25 Sept 2020 7:42 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் பல்வேறு அமைப்பினர் புதிய வேளாண் மசோதா நகல்களை எரித்து போராட்டம் நடத்தினர்.

திருச்சி,

புதிய வேளாண் மசோதாவுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. 3 மசோதாக்களையும் திரும்ப பெற வேண்டும் என குரல் ஒலிக்க தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு பல்வேறு அமைப்புகள் இணைந்து காவிரி உரிமை மீட்புக்குழு என்று உருவாக்கி புதிய வேளாண் மசோதாக்களின் நகல்களை எரிக்கும் போராட்டத்தை நேற்று நடத்தியது.

வேளாண் நகல்களை எரிக்க முயற்சித்தபோது போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன், அவற்றை பறிக்க முயற்சித்தார். இதனால், இருதரப்பினருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இந்த போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க (அரசியல் சார்பற்றது) மாவட்ட செயலாளர் சின்னத்துரை, மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன், சமூக நீதிப்பேரவை தலைவர் ரவிக்குமார், சனநாயக சமூகநல கூட்டமைப்பு தலைவர் சம்சுதீன், தமிழ் தேசிய பேரியக்க நிர்வாகி கவித்துவன், மக்கள் உரிமை மீட்புக்குழு இயக்க அமைப்பாளர் பஷீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

60 பேர் கைது

அவர்களை கண்டோன்மெண்ட் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அப்போதும் சிலர், கையில் உள்ள மசோதா நகல்களை மீண்டும் எரித்து, மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முடிவில் வேளாண் மசோதா நகல்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்திற்கு கொண்டு சென்று அடைத்தனர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சி

இதுபோல திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் புதிய வேளாண் சட்ட மசோதாக்களின் நகல்களை கிழித்தெறியும் போராட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் ஹஸ்ஸ்ான் பைஜி தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தின்போது விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷமிடப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். மேலும் மாலையில் திருவெறும்பூர் பஸ் நிறுத்தம் அருகில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நகல் கிழிப்பு போராட்டம் நடந்தது.

Next Story