சரஸ்வதி மகால் நூலகம் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறது அமைச்சர் துரைக்கண்ணு பேச்சு


சரஸ்வதி மகால் நூலகம் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறது அமைச்சர் துரைக்கண்ணு பேச்சு
x
தினத்தந்தி 25 Sep 2020 2:45 AM GMT (Updated: 25 Sep 2020 2:45 AM GMT)

சரஸ்வதி மகால் நூலகம் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறது என்று அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள சங்கீத மகால் கூட்டரங்கில் சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம் சார்பில் மன்னர் சரபோஜியின் 243-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சரசுவதி மகால் நூலகம் சார்பில் புதிய நூல்களை அமைச்சர் துரைக்கண்ணு வெளியிட, வைத்திலிங்கம் எம்.பி. பெற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து 14 மறுபதிப்பு நூல்களையும் அவர்கள் வெளியிட்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கோவிந்தராவ் முன்னிலை வகித்தார். சரஸ்வதி மகால் நூலக ஆட்சிக்குழு உறுப்பினர் சிவாஜிராஜாபோன்ஸ்லே வரவேற்றார்.

அமைச்சர் துரைக்கண்ணு

விழாவில் அமைச்சர் துரைக்கண்ணு பேசுகையில், “உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் சரஸ்வதி மஹால் நூலகத்தில் பல சிறப்பு வாய்ந்த நூல்கள் உள்ளன. மருத்துவ குறிப்புகளை ஓலைச்சுவடிகள் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தவர் மன்னர் சரபோஜி ஆவார். இரண்டாம் சரபோஜி மன்னர் காசிக்கு சென்றபோது அங்கிருந்து பல நூல்களை சரஸ்வதி மகால் நூலகத்திற்கு பெற்றுக்கொடுத்தார். சரஸ்வதி மஹால் நூலகம் உலகளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கக் கூடியதாகும். இந்நூலகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும்”என்றார்.

சரஸ்வதி மகால் நூலகம்

வைத்திலிங்கம் எம்.பி. பேசுகையில், “தஞ்சையை சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் உள்ளிட்ட அரச வம்சத்தினர் ஆண்டுள்ளனர். மராட்டிய மன்னர்கள் தஞ்சையின் வளர்ச்சிக்கு பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர். அதற்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டு சரஸ்வதி மகால் நூலகமாகும். சரஸ்வதி மஹால் நூலகம் மருத்துவம், விஞ்ஞானம், மொழி போன்ற பல்வேறு துறைகளின் நூல்களை கொண்டுள்ளது. தஞ்சை நகரத்தின் கட்டமைப்பை வடிவமைத்தவர்கள் மராட்டிய மன்னர்கள் ஆவர். பல மொழிகளில் உள்ள ஆக்கப்பூர்வமான நூல்களை சரஸ்வதி மகால் நூலகத்திற்கு கொண்டுவந்து தஞ்சைக்கு பெருமை சேர்த்தவர் மன்னர் சரபோஜி ஆவார்”என்றார்.

நூலக மேம்பாட்டிற்கு உதவி

கலெக்டர் கோவிந்தராவ் பேசுகையில், “மன்னர் சரபோஜி பன்முகத்திறமை கொண்ட ஒரு அரசர். தஞ்சையின் வளர்ச்சிக்கு மன்னர் சரபோஜியின் பங்களிப்பு மகத்தானதாகும். கல்வி, இசை, கலை, கலாசாரம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர் அவர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல நூல்கள் சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ளது. மன்னர் சரபோஜி மனிதநேய மிக்க மாமன்னர் ஆவார். சரஸ்வதி மகால் நூலக மேம்பாட்டிற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து உதவிகளும் மேற்கொள்ளப்படும்”என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், மொத்த கூட்டுறவு பண்டகசாலை துணைத்தலைவர் ரமேஷ், நிலவள வங்கி தலைவர் துரை.வீரணன் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் சரஸ்வதிமகால் நூலக நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Next Story