காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 40 ஆயிரம் கனஅடியாக குறைந்தது


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 40 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
x
தினத்தந்தி 25 Sept 2020 9:00 AM IST (Updated: 25 Sept 2020 9:00 AM IST)
t-max-icont-min-icon

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

பென்னாகரம்,

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் உபரி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடி கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்தது.

இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

போலீசார் ரோந்து

இந்தநிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது குறைந்தது. இதையொட்டி ஒகேனக்கலுக்கு தண்ணீர் வரத்து நேற்று காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இந்த நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர்.

ஒகேனக்கல்லில் தண்ணீர் வரத்து கூடுவதும் குறைவதுமாக உள்ளதால் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story