திண்டுக்கல்லில் நகரும் ரேஷன் கடை சேவை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்


திண்டுக்கல்லில் நகரும் ரேஷன் கடை சேவை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 25 Sept 2020 10:53 AM IST (Updated: 25 Sept 2020 10:53 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில், நகரும் ரேஷன் கடை சேவையை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட் களை பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு அருகிலேயே கொண்டு சென்று வழங்கும் வகையில் அம்மா நகரும் ரேஷன் கடை சேவை நேற்று தொடங்கப்பட்டது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் நடந்தது.

இதற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நகரும் ரேஷன் கடை சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசிய போது கூறியதாவது:-

ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நகரும் ரேஷன் கடை சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 37 மாவட்டங் களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

28,819 பேர்...

அந்த வகையில் திண்டுக்கல்லில் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் கோட்டைப்பட்டியில் 250 ரேஷன் கார்டுதாரர்கள், சொக்கலிங்கபுரத்தில் 60 ரேஷன் கார்டுதாரர்கள், சத்யா நகரில் 355 ரேஷன் கார்டு தாரர்கள் பயன்பெறும் வகையிலும், சீலப்பாடி நகர கூட்டுறவு கடன் சங்கம் மூலம் செட்டியபட்டியில் 265 ரேஷன் கார்டுதாரர்கள் என மாவட்டம் முழுவதும் உள்ள 157 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் பயன்பெறும் வகையில் அம்மா நகரும் ரேஷன் கடை சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதற்காக 56 வாகனங்கள் ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த வாகனங்கள் மூலம் ரேஷன் பொருட்களான அரிசி, துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை, கோதுமை, ரவை, மைதா உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு நேரடியாக கொண்டு சென்று வினியோகம் செய்யப்படும். இந்த வாகனங்களில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் சென்று பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்குவார்கள். இந்த திட்டத்தின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 28 ஆயிரத்து 819 பேர் பயனடைவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

வீட்டுமனை பட்டா

அதையடுத்து திண்டுக்கல் கிழக்கு தாலுகா அடியனூத்து கிராமத்தை சேர்ந்த 13 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த 6 பேருக்கு சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடு கட்டுவதற்கான ஆணை ஆகியவற்றை அமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் முருகேசன், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story