தேவேந்திர பட்னாவிஸ்- சஞ்சய் ராவத் எம்.பி. திடீர் சந்திப்பு மராட்டிய அரசியலில் பரபரப்பு


தேவேந்திர பட்னாவிஸ்- சஞ்சய் ராவத் எம்.பி. திடீர் சந்திப்பு மராட்டிய அரசியலில் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Sept 2020 5:36 AM IST (Updated: 27 Sept 2020 5:36 AM IST)
t-max-icont-min-icon

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், பாரதீய ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை திடீரென சந்தித்து பேசியது மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலை பாரதீய ஜனதா, சிவசேனா கட்சிகள் இணைந்து சந்தித்தன. எனினும் முதல்-மந்திரி பதவியை சிவசேனா பங்கு கேட்டதால் அந்த நீண்ட கால கூட்டணி முறிந்தது. அதன்பிறகு சிவசேனா மாறுபட்ட கொள்கையை உடைய தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது.

இந்தநிலையில் நேற்று சிவசேனா மூத்த எம்.பி.யும், சாம்னா நிர்வாக ஆசிரியருமான சஞ்சய் ராவத், பாரதீய ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்தது.

தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு பாரதீய ஜனதா, சிவசேனா தலைவர்கள் சந்தித்து நீண்ட நேரம் பேசியதில்லை. மாறாக அவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் சஞ்சய் ராவத், சட்டசபை எதிர்கட்சி தலைவரான தேவேந்திர பட்னாவிசை சந்தித்து 2 மணி நேரம் பேசியிருப்பது மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எனினும் இந்த சந்திப்பில் அரசியல் பேசப்படவில்லை என பாரதீய ஜனதா தலைவர்கள் விளக்கம் கொடுத்து உள்ளனர். மேலும் சாம்னா பத்திரிகைக்கு பேட்டி கொடுப்பது தொடர்பாகவே 2 பேரும் சந்தித்ததாகவும் கூறியுள்ளனர்.

இதுகுறித்து பாரதீய ஜனதா மாநில தலைமை செய்தி தொடர்பாளர் கேசவ் உபாத்தாய் டுவிட்டர் பதிவில், “ ராவத் சாம்னாவிற்காக பட்னாவிசை பேட்டி எடுக்க விரும்பினார். அதுதொடர்பாகவே 2 பேரும் சந்தித்து பேசினர். பீகார் தேர்தல் பிரசாரத்திற்கு சென்று வந்த பிறகு பேட்டி அளிப்பதாக பட்னாவிஸ், சஞ்சய் ராவத்திடம் கூறினார்“ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல பாரதீய ஜனதாவை சேர்ந்த மத்திய மந்திரி ராவ்சாகேப் தன்வே கூறுகையில், “ மாநிலத்தில் பா.ஜனதா எதிர்கட்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மராட்டியத்தில் ஆட்சியை அமைக்க பாரதீய ஜனதா எந்த கட்சியையும் உடைக்க முயற்சி செய்யவில்லை “ என்றார். இதேபோல முன்னாள் மந்திரி சுதீர் முங்கண்டிவார் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து கூறியுள்ளார்.

மேலும் பட்னாவிசை சந்தித்து பேசியது குறித்து சஞ்சய் ராவுத் கூறுகையில், “ முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய சட்டசபை எதிர்கட்சி தலைவரான பட்னாவிசை சந்தித்தது குற்றமா?. சரத்பவாரை பேட்டி எடுத்த போதே பட்னாவிஸ், ராகுல்காந்தி, அமித்ஷா ஆகியோரையும் பேட்டி எடுக்க திட்டமிட்டு உள்ளதாக அறிவித்து இருந்தேன். எதிர்கட்சி தலைவர்களை சந்தித்து பேசுவது அரசியலில் குற்றம்இல்லை“ என்றார்.

சாம்னாவில் முதல் முறையாக பால்தாக்கரே, உத்தவ் தாக்கரேவுக்கு பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன் சரத்பவாரின் பேட்டி தொடர்ச்சியாக 3 நாட்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதேபோல பட்னாவிஸ், சஞ்சய் ராவத் சந்திப்பில் அரசியல் பேசப்படவில்லை என 2 கட்சிகளும் மறுத்து உள்ள போதும், பாரதீய ஜனதாவை சேர்ந்த சட்ட மேல்-சபை எதிர்கட்சி தலைவர் பிரவின் தாரேகர் டி.வி. சேனல் ஒன்றில் அரசியலில் எதுவும் நடக்கலாம் என கூறியுள்ளதும், ராவ்சாகிப் தன்வே இதுபோன்ற சந்திப்புகள் வருங்காலத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம் என கூறியுள்ளதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Next Story