குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க போலீசாரை உதவிக்கு அழைக்கலாம் டி.ஐ.ஜி. பேச்சு


குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க போலீசாரை உதவிக்கு அழைக்கலாம் டி.ஐ.ஜி. பேச்சு
x
தினத்தந்தி 27 Sept 2020 2:11 PM IST (Updated: 27 Sept 2020 2:11 PM IST)
t-max-icont-min-icon

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க போலீசாரை உதவிக்கு அழைக்கலாம் என்று டி.ஐ.ஜி. ஆனி விஜயா கூறினார்.

ஜெயங்கொண்டம்,

ஜெயங்கொண்டத்தில் போலீசார் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உதவியை உறுதிபடுத்தும் வகையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா தலைமை தாங்கினார். திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான மற்றும் வன்முறையற்ற சமுதாயம் உருவாக்க திருச்சி சரக காவல்துறை ஒரு புதிய திட்டத்தை உருவாக்கியிருக்கிறது. அதில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பான உதவிகளுக்கு அவசர அழைப்புக்காக பல்வேறு எண்களை அறிமுகம் செய்து, குற்றங்கள் நடைபெறாமல் இருக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது சிறப்பு உதவி எண் 9384501999 மற்றும் 6383071800, காவல் 100, சைல்டு லைன் 1098, பெண்களுக்கான உதவி எண் 181 மற்றும் 1091 உள்ளிட்ட எண்களை கொண்டு, கேடயம் சேப் சொசைட்டி என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த எண்களை அனைவரும் பயன்படுத்தி போலீசாரை உதவிக்கு அழைக்கலாம். தக்க நேரத்தில் போலீசார் உங்களுக்கு உதவிபுரிவார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பது அவசியமாகிறது. எனவே பெண்களும், குழந்தைகளும் தங்களது பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் மேற்கண்ட எண்களை அழைத்து பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மறைக்காமல் கூற வேண்டும்

கூட்டத்திற்கு அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், அரியலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ், அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா, குழந்தைகள் தடுப்பு மற்றும் பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வாணி மற்றும் பாதுகாப்பு அலுவலர் (மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு) செல்வராஜ், குழந்தைகள் உதவி சேவை மைய ஒருங்கிணைப்பாளர் வீரபாண்டியன் ஆகியோர் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், அவற்றை பெற்றோர்கள் மறைக்காமல் அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்க ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொண்டனர். முன்னதாக போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சூர்யா வரவேற்றார். முடிவில் ஜெயங்கொண்டம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வசந்த் நன்றி கூறினார். இதில் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து கேடயம் திட்டம் பற்றிய வாசகங்கள் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு போலீசார் சார்பில் வழங்கப்பட்டது.

Next Story