பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை, சீர்காழியில் நடந்தது


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை, சீர்காழியில் நடந்தது
x
தினத்தந்தி 27 Sep 2020 12:26 PM GMT (Updated: 27 Sep 2020 12:26 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை, சீர்காழியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் முன்பு உணவு பாதுகாப்பு சட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை இணைத்திடக்கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் தாமரைச்செல்வி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், சி.பி.எம். மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் உணவு உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளை இணைத்திட மத்திய அரசு முன் வர வேண்டும். இதுதொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படுத்தப்பட்டுள்ள வேளாண் திருத்த சட்டங்களை உடனே திரும்பப்பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் அப்துல்ரஹீம், சந்திரபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சீர்காழி

இதேபோல் சீர்காழி தாசில்தார் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சீர்காழி நகர மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகி நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் செல்லதுரை, சீர்காழி நகர துணை தலைவர் நடராஜன், நகர செயலாளர் சுரேஷ்குமார், நிர்வாகி பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கணேசன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். கொரோனா நிவாரண நிதியாக ரூ.5,000 ஆக வழங்க வேண்டும். விவசாயிகளை பாதிக்கும் வேளாண் மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story