உலக சுற்றுலா தினத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலில் தூய்மை பணி


உலக சுற்றுலா தினத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலில் தூய்மை பணி
x
தினத்தந்தி 27 Sept 2020 6:16 PM IST (Updated: 27 Sept 2020 6:16 PM IST)
t-max-icont-min-icon

உலக சுற்றுலா தினத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலில் தூய்மை பணி நேற்று நடைபெற்றது.

தஞ்சாவூர்,

மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் தூய்மையே சேவை இயக்கம் செப்டம்பர் 16-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையும், உலக சுற்றுலா தினம் 27-ந்தேதியும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு, இந்திய சுற்றுலா, தமிழக அரசு சுற்றுலா துறை, சுற்றுலா வளர்ச்சி குழுமம் மற்றும் இன்டாக் அமைப்பின் சார்பில் நேற்று முதல் வருகிற 2-ந்தேதி வரை தூய்மையே சேவை இயக்கத்தை உலக சுற்றுலா தின நிகழ்வுகள் மூலம் ஏற்பாடு செய்துள்ளது.

இதையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் தூய்மை பணியும் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பணியாளர்கள் கலந்து கொண்டு தூய்மை பணிகளை மேற்கொண்டனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு சுற்றுலா தின வரவேற்பு நிகழ்ச்சியும், மாலையில் தஞ்சையின் பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

மாறுவேடப்போட்டி

நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 2-ந்தேதி வரை தினமும் காலை 10 மணிக்கு சுற்றுலா மற்றும் கிராமப்புற மேம்பாடு, தூய்மை பணி, தஞ்சை தலையாட்டி பொம்மை செய்தல், உடல் சுகாதாரம் மற்றும் தனிநபர் இடைவெளி மற்றும் கிராமபுறப் பொருளாதாரம் குறித்த கருத்தரங்கம் நேரலையில் நடைபெறும். 28-ந்தேதி புகைப்படப் போட்டி, 29-ந்தேதி கட்டுரைப்போட்டி, 30-ந்தேதி ரங்கோலிப் போட்டி, 1-ந்தேதி ஓவியப்போட்டி மற்றும் 2-ந்தேதி மாறுவேடப்போட்டி ஆகிய போட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெறும்.

இந்த விழாவில் கலெக்டர் கோவிந்தராவ், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே மற்றும் இந்திய சுற்றுலா, தமிழக சுற்றுலா அலுவலர்கள், அரசு அலுவலர்கள், இன்டாக் உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை இன்டாக்கவுரவ செயலாளர் முத்துக்குமார், இந்திய சுற்றுலா உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன், தகவல் அலுவலர் நரேந்திரன், சுற்றுலா அலுவலர் ஜெயக்குமார், சுற்றுலா ஆலோசகர் ராஜசேகர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Next Story