மீஞ்சூர் அருகே பரிதாபம்: மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி விபத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


மீஞ்சூர் அருகே பரிதாபம்: மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி விபத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 28 Sept 2020 5:00 AM IST (Updated: 28 Sept 2020 3:34 AM IST)
t-max-icont-min-icon

மீஞ்சூர் அருகே மாநகர பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானான். விபத்தில் பலியான சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மீஞ்சூர்,

மீஞ்சூர் அருகே உள்ள அரியன்வாயல் கிராமத்தில் வசிப்பவர் சுல்தான்பாஷா (வயது 40). இவருக்கு 10 வயதில் நாகூர்மீரான் உசேன் என்ற மகன் இருந்தான். இந்த சிறுவன் சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

நாகூர்மீரான் உசேன் நேற்று மாலை வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தான். இந்நிலையில், திருவொற்றியூர் டிப்போவில் இருந்து புறப்பட்ட மாநகர பஸ் மீஞ்சூர்-காட்டூர் நெடுஞ்சாலையில் பழவேற்காடு செல்வதற்காக வேகமாக வந்து கொண்டிருந்தது.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிறுவன் நாகூர்மீரான்உசேன் மீது பஸ் மோதியதில் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானான். இதைக்கண்டு சம்பவ இடத்திற்கு திரண்டு வந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பஸ்சை தடுத்து நிறுத்தி விபத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்து மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் மதியரசன், சப்- இன்ஸ்பெக்டர் மாரிமுத்து உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் உறவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், பலியான சிறுவன் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்கப்படும் என்றும், விபத்துக்கு காரணமான டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுதியளித்தனர். இதனால் சமாதானம் அடைந்த பொதுமக்கள் 2 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story