கலபுரகி அருகே, கார்-லாரி மோதல்: கர்ப்பிணி உள்பட 7 பேர் சாவு - பிரசவத்திற்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற போது சோகம்


கலபுரகி அருகே, கார்-லாரி மோதல்: கர்ப்பிணி உள்பட 7 பேர் சாவு - பிரசவத்திற்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற போது சோகம்
x
தினத்தந்தி 28 Sept 2020 5:12 AM IST (Updated: 28 Sept 2020 5:12 AM IST)
t-max-icont-min-icon

கலபுரகி அருகே, காரும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் கர்ப்பிணி உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரசவத்திற்காக கர்ப்பிணியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

கலபுரகி,

கலபுரகி அருகே கலமந்தி பகுதியில் நேற்று காலை ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே ஒரு லாரி வந்தது. இந்த சந்தர்ப்பத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக லாரியும், காரும் நேருக்கு நேராக மோதிக்கொண்டன. லாரி மோதிய வேகத்தில் கார், சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது.

இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த கலபுரகி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் காரில் சிக்கிய 7 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கலபுரகி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விபத்து குறித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் உயிரிழந்தவர்கள் ஆலந்தாவை சேர்ந்த இர்பானா பேகம்(வயது 25), ருசியா பேகம்(50), அபிதாபி பேகம்(50), முனீர்(28), முகமது அலி(30), சவுகத் அலி(29), ஜெய் சுனபி(60) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதில் இர்பானா பேகம் நிறைமாத கர்ப்பிணி ஆவார்.

அவருக்கு நேற்று காலையில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவரை ஆஸ்பத்திரிக்கு காரில் ருசியா பேகம் உள்ளிட்டோர் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக காரும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கர்ப்பிணியான இர்பானா பேகம் உள்பட 7 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து கலபுரகி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் கர்ப்பிணி உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் கலபுரகியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story