காரைக்கால் பஸ் நிலையத்தில் இயங்கும் தற்காலிக மீன் மார்க்கெட் மேற்கூரை சரிந்து விழுந்தது; பெண்கள் உள்பட 12 பேர் காயம்


காரைக்கால் பஸ் நிலையத்தில் இயங்கும் தற்காலிக மீன் மார்க்கெட் மேற்கூரை சரிந்து விழுந்தது; பெண்கள் உள்பட 12 பேர் காயம்
x
தினத்தந்தி 28 Sep 2020 12:28 AM GMT (Updated: 28 Sep 2020 12:28 AM GMT)

காரைக்கால் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மீன் மார்க்கெட்டின் மேற்கூரை சரிந்து விழுந்தது. இதில் மீனவ பெண்கள் உள்பட 12 பேர் காயமடைந்தனர்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற ஏதுவாக, காரைக் கால் தற்காலிக நேரு மார்க்கெட்டில் இயங்கிவந்த, மீன் மார்க்கெட், புதிய பஸ் நிலையத்துக்கும், காய்கறி கடைகள் நகர காவல் நிலையம் அருகிலும் இடமாற்றப்பட்டது.

பஸ் நிலையத்தில் இயங்கிவரும் மீன் மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு வசதியாக துணியினால் ஆன மேற்கூரை அமைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த துணி பந்தல் கிழிந்து தொங்கியது. இதுபற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மீனவ பெண்கள் ஏராளமானவர்கள் கடை விரித்து, மும்முரமாக வியாபாரத்தில் ஈடுபட்டுகொண்டிருந்தனர். ஆண்களும், பெண்களும் என திரளானவர்கள் பேரம் பேசி மீன்கள் வாங்கினர். அப்போது திடீரென்று மேற்கூரை சரிந்து விழுந்தது. இதை பார்த்ததும் பொதுமக்களும், பெண் மீன் வியாபாரிகளும் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

பந்தல் அமைத்திருந்த சவுக்கு கட்டைகளுடன் மேற்கூரை விழுந்ததில் லட்சுமி (வயது 42), அஞ்சலி (45) உள்பட 8 மீனவ பெண்கள் மற்றும் பொதுமக்கள் 4 பேர் என 12 பேர் காயமடைந்தனர். இவர் கள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து மீனவ பெண்கள் கூறுகையில், ‘கடந்த 4 மாதங்களாக எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி இந்த தற்காலிக மீன் மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வருகிறோம். இங்கு கழிவறை, குடிநீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. மீன் மார்க்கெட்டை கூட முறையாக அமைக்கவில்லை. எனவே, பழையபடி மீன் மார்க்கெட்டில் மீன் விற்பதற்கு அனுமதிக்க வேண்டும்’ என்றனர்.

Next Story