போதிய மழை பெய்யாததால் கறம்பக்குடியில் ஏரி-குளங்கள் வறண்டன விவசாயிகள் கவலை


போதிய மழை பெய்யாததால் கறம்பக்குடியில் ஏரி-குளங்கள் வறண்டன விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 28 Sep 2020 1:18 AM GMT (Updated: 28 Sep 2020 1:18 AM GMT)

போதிய மழை பெய்யாததால் கறம்பக்குடி பகுதியில் தண்ணீர் இன்றி ஏரி, குளங்கள் வறண்டன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகாவில் 39 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 10 ஊராட்சிகளில் காவிரி பாசன பகுதிகளாகும். மீதமுள்ள 29 ஊராட்சிகளில் வானம் பார்த்த பூமியாகவே உள்ளன. பருவ காலங்களில் பெய்யும் மழை மூலம் ஏரி, குளங்கள் நிரம்பி, அவற்றின் மூலமும் ஆழ்குழாய் பாசனத்தின் மூலமும் மட்டுமே அப்பகுதிகளில் விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஓரளவு மழை பெய்ததால் ஏரி, குளங்களில் தண்ணீர் இருந்தது.

இதனால் அப்பகுதி விவசாயிகள், நெல், கரும்பு, சோளம், வாழை போன்ற பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்திருந்தனர். விளைச்சலும் அதிகரித்திருந்தது.

கோரிக்கை

அதேபோல் இந்த ஆண்டும் பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் காவிரி பாசன பகுதி விவசாயிகளோடு இணைந்து சம்பா சாகுபடி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் மழை ஓரளவு பெய்த போதும் கறம்பக்குடி பகுதியில் மழை பெய்யவில்லை.

இதனால் சம்பா நடவு பணிகளில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் கவலை அடைந்து உள்ளனர். மேலும் மழை பெய்தாலும் ஏரி, குளங்களில் வரத்து வாரிகள் தூர்வாரப்படாததால் தண்ணீர் முழுமையாக வந்து சேருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, பாசன குளங்களின் வரத்து வாரிகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story