பெரியகுளத்தில் மருத்துவ அதிகாரி வீட்டில் நகை, பணம் திருடிய வழக்கில் 5 பேர் கைது


பெரியகுளத்தில் மருத்துவ அதிகாரி வீட்டில் நகை, பணம் திருடிய வழக்கில் 5 பேர் கைது
x
தினத்தந்தி 28 Sept 2020 8:53 AM IST (Updated: 28 Sept 2020 8:53 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளத்தில் மருத்துவ அதிகாரி வீட்டில் நகை, பணம் திருடிய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரியகுளம்,

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை அரண்மனை தெருவை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 73). டாக்டரான இவர், மாவட்ட அரசு நலப்பணிகள் துறை இணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 17-ந்தேதியன்று இவர், தனது குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார்.

இதைநோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது வீட்டின் கதவு மற்றும் பீரோவை உடைத்து உள்ளே இருந்த ரூ.61 ஆயிரம் மற்றும் 20 பவுன் நகைகள், எல்.இ.டி. டி.வி., மடிக்கணினி ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் திருட்டு வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நேற்று முன்தினம் வடகரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

5 பேர் கைது

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் மடக்கிபிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பெரியகுளம் வடகரை மில்லர் ரோட்டை சேர்ந்த ஸ்ரீதர் (23), வைத்தியநாதபுரத்தை சேர்ந்த சின்னதம்பி (22), டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த ஜெரால்டு புஷ்பராஜ் (19) என்று தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் ஒரு எல்.இ.டி. டி.வி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினர். அந்த டி.வி., கருணாகரன் வீட்டில் திருடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த அழகர்சாமிபுரத்தை சேர்ந்த புவனேஸ்வரன் (20), சிபிராஜ் (18) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கருணாகரன் வீட்டில் திருடிய நகைகள், ரூ.21 ஆயிரம், டி.வி., மடிக்கணினி மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிலை திருட்டு வழக்கு

இதற்கிடையே கருணாகரன் வீட்டில் திருடிய பணத்தின் மூலம் ரூ.40 ஆயிரத்துக்கு அவர்கள் மோட்டார் சைக்கிள் வாங்கி ஊர்சுற்றி வந்துள்ளனர். பின்னர் அந்த மோட்டார் சைக்கிளில், நகை மற்றும் பொருட்களை திருப்பூரில் விற்பதற்காக கொண்டு சென்ற போது போலீசிடம் அவர்கள் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 5 பேரும் பெரியகுளம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஆண்டிப்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைதான ஸ்ரீதர் மீது, பெரியகுளம் பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் சிலை திருடிய வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story