அ.தி.மு.க செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி


அ.தி.மு.க செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 28 Sep 2020 4:59 AM GMT (Updated: 28 Sep 2020 4:59 AM GMT)

இன்று நடைபெறும் அ.தி.மு.க. செயற்குழுவில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை,

வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கள்ளந்திரி கால்வாயை நேற்று வந்தடைந்தது. அப்போது அமைச்சர் செல்லூர் ராஜூ, கலெக்டர் வினய், பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் ஆகியோர் மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர். பின்னர் கள்ளந்திரியில் பெரியாறு பாசனப் பகுதியில் ஒரு போக பாசன நிலங்களுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ தண்ணீர் திறந்து வைத்தார்.

இதில் மேலூர் யூனியன் தலைவர் பொன்னுச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் எம்.கே.பாலகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் பெரியசாமி, மாவட்ட பொருளாளர் அம்பலம், வைகை-பெரியாறு பாசன ஒரு போக சாகுபடி விவசாயிகள் சங்க தலைவர் முருகன், மதுரை பெரியாறு- வைகை வடிகால் வட்டம் கண்காணிப்பு பொறியாளர் சுகுமார், பெரியாறு பிரதான கால்வாய் கோட்டம் செயற்பொறியாளர் பவளகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒரு போக பாசனம்

பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

2020-21-ம் ஆண்டிற்கான பெரியாறு-வைகை பாசனத்திற்காக பெரியாறு பாசன பகுதியில் உள்ள ஒரு போக பாசன பரப்பான 85 ஆயிரத்து 563 ஏக்கர் நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன பரப்பான 19 ஆயிரத்து 439 ஏக்கர் நிலங்களுக்கும் என மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 1,130 கனஅடி வீதம் இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, திருமங்கலம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை தெற்கு மற்றும் மதுரை வடக்கு ஆகிய தாலுகா பகுதிகளுக்கும், சிவகங்கை தாலுகா மற்றும் திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள பாசன பரப்புகளும், கண்மாய்களும் பயன் பெறும். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்(பெரியாறு-வைகை) சுகுமாறன், மேலூர் வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஸ்டாலின் ஆசை

அதன் தொடர்ச்சியாக அமைச்சர் செல்லூர் ராஜூ, கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அதன்பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வின் செயற்குழு கூட்டம்(இன்று) நடக்கிறது. அதிலே சில முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். எந்த முடிவு எடுத்தாலும், அதில் வருகிற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் தான் இருக்கும். அந்த முடிவை அனைத்து தொண்டர்களும் ஏற்று கொள்ள வேண்டும். இந்தியாவின் சிறந்த நிர்வாகி பிரதமர் மோடி. அவர் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லக்கூடியவர். அவரே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளையும், நிர்வாகத்தையும், தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட அத்தனையும் பேரையும் பாராட்டி இருக்கிறார். தமிழக மக்களும், இளைஞர்களும் மு.க.ஸ்டாலின் எது பேசினாலும், பார்ப்பதும், கேட்பதும் கிடையாது. ஸ்டாலின், காலையில் எழுந்தவுடனே இந்த அரசை குற்றம் சொல்லி தான் பேசுவார் என்று தமிழக மக்களே புரிந்து கொண்டு உள்ளனர். ஸ்டாலினின் ஆசை நிறைவேறாமல் தான் போகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story