ஜமுனாமரத்தூரில் நிலப் பிரச்சினையில் தொழிலாளி அடித்து கொலை தந்தை, மகன் கைது


ஜமுனாமரத்தூரில் நிலப் பிரச்சினையில் தொழிலாளி அடித்து கொலை தந்தை, மகன் கைது
x
தினத்தந்தி 29 Sept 2020 6:47 AM IST (Updated: 29 Sept 2020 6:47 AM IST)
t-max-icont-min-icon

ஜமுனாமரத்தூரில் நிலப்பிரச்சினையில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை,

ஜமுனாமரத்தூர் அருகில் உள்ள நம்மியம்பட்டு ஊராட்சி மேல்குப்சணாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 40), கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெள்ளையன் (50) மற்றும் அவரது மகன் அண்ணாமலை (32) ஆகியோருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ராஜேந்திரன் வெள்ளையனுக்கு சித்தப்பா மகன் ஆவார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில் நிலப்பிரச்சினை தொடர்பாக இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வெள்ளையன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் சேர்ந்து ராஜேந்திரனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நம்மியம்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஜமுனாமரத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளையன் மற்றும் அவரது மகன் அண்ணாமலை ஆகியோரை கைது செய்தனர்.

Next Story