தொழிலாளி கொலை வழக்கில் புகைப்பட கலைஞருக்கு 10 ஆண்டு சிறை விருத்தாசலம் கோர்ட்டு தீர்ப்பு


தொழிலாளி கொலை வழக்கில் புகைப்பட கலைஞருக்கு 10 ஆண்டு சிறை விருத்தாசலம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 29 Sept 2020 7:09 AM IST (Updated: 29 Sept 2020 7:09 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலி அருகே தொழிலாளியை கொலை செய்த வழக்கில் புகைப்பட கலைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விருத்தாசலம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

விருத்தாசலம்,

நெய்வேலி அருகே மேல்பாப்பனப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நல்லதம்பி மகன் சண்முகசுந்தரம் (வயது 25). அதே பகுதியை சேர்ந்தவர் இவரது தாய்மாமன் செந்தில்முருகன். இவர் பழைய நெய்வேலியை சேர்ந்த புகைப்பட கலைஞர் ராமச்சந்திரன் (41) என்பவரின் தங்கை செந்தமிழ்தேவியை கடந்த 2015-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் செந்தில்முருகனுக்கும், செந்தமிழ்தேவிக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் அவர் கோபித்துக்கொண்டு தன்னுடைய அண்ணன் ராமச்சந்திரன் வீட்டிற்கு சென்று விடுவார். சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதால், அவர் ராமச்சந்திரன் வீட்டிற்குச்சென்று விட்டார்.

இதையடுத்து அவரை சமாதானப்படுத்தி அழைத்து வருவதற்காக செந்தில்முருகன், ராமச்சந்திரன் வீட்டுக்கு சென்றார். ஆனால் அங்கு ராமச்சந்திரன் இல்லை. இருப்பினும் அவரது குடும்பத்தினர் செந்தில்முருகனை ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதனால் அங்கிருந்த செந்தில்முருகன் தன்னுடைய அக்கா மகன் சண்முகசுந்தரம் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதை அறிந்த ராமச்சந்திரன் கடந்த 12.9.2017 அன்று சண்முகசுந்தரம் வீட்டிற்குச்சென்று அங்கிருந்த செந்தில்முருகனை ஆபாசமாக பேசி, கத்தியால் வெட்டினார். இதை தடுத்த சண்முகசுந்தரம், அவரது தம்பி தொழிலாளியான சிவபாலன் (22) ஆகியோரையும் கத்தியால் குத்தினார். இதில் சிவபாலன் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து இறந்தார்.

இது குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கு விருத்தாசலம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி இளவரசன் தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், ராமச்சந்திரன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 1,100 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் விஜயகுமார் ஆஜராகி வாதாடினார்.


Next Story