கொரோனாவை தொடர்ந்து காங்கோ காய்ச்சல் பால்கர் மாவட்டத்தில் உஷார்


கொரோனாவை தொடர்ந்து காங்கோ காய்ச்சல் பால்கர் மாவட்டத்தில் உஷார்
x
தினத்தந்தி 30 Sept 2020 3:03 AM IST (Updated: 30 Sept 2020 3:03 AM IST)
t-max-icont-min-icon

காங்கோ காய்ச்சல் பரவ வாய்ப்பு இருப்பதால் பால்கர் மாவட்டத்தில் உஷார்படுத்தப்பட்டு உள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அங்குள்ள பால்கர் மாவட்டத்தில் காங்கோ காய்ச்சல் பரவலுக்கு எதிராக உஷாராக இருக்குமாறு உள்ளூர் அரசு நிர்வாகம் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளது.

காங்கோ காய்ச்சல் என அழைக்கப்படுகிற கிரிமியன் காங்கோ ரத்த கசிவு காய்ச்சல், மனிதர்களுக்கு உண்ணிகள் மூலம் பரவக்கூடியது.

குஜராத்தின் சில மாவட்டங்களில் இந்த தொற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதையொட்டி மராட்டிய எல்லையில் அமைந்துள்ள மாவட்டங்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நோயை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், 40 சதவீத நோயாளிகள் இறக்க நேரிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட நபருடன் மற்றவர்கள் நெருங்கிய தொடர்பில் இருந்தால் பரவும்.

கலெக்டர் அறிக்கை

இதற்கிடையே பால்கர் மாவட்ட கலெக்டர் மானேக் குர்சேலே விடுத்து உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்த வைரஸ் கால்நடைகள் வளர்ப்பவர்கள் மற்றும் இறைச்சியை உண்பவர்கள், விற்பனை செய்பவர்களிடையே வேகமாக பரவ வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதற்கான தடுப்பு ஊசி தற்போது உள்ள நிலவரப்படி கண்டுபிடிக்கப்படவில்லை. குஜராத் மாநிலத்தில் இருந்து பால்கர் மாவட்டத்திற்கு கொண்டு வரும் கால்நடைகளை முறையான பரிசோதனை செய்யும் படியும், இறைச்சி விற்பனை கடைகளில் பூச்சுக்கொல்லி மருந்துகளை தெளித்து சுகாதாரம் பேணிக்காக்கவும், முகக்கவசம், கையுகளை அணிந்து கொள்ளும்படியும் உத்தரவிட்டு உள்ளோம்.

வைரஸ் பாதிக்கப்பட்ட நபருக்கு காய்ச்சல், தலை வலி, உடல் வலி, மூக்கில் இருந்து ரத்தபோக்கு, வயிற்று வலி, கண்கள் சிகப்பாகுதல் போன்ற அறிகுறிகள் தென்படும். இதனால் பால்கர் மாவட்டத்தில் பரவாமல் இருக்க அனைத்து இறைச்சி கூடம், கடைகளுக்கு சுற்றரிக்கை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story