ரோடியர் மில்லை தொடர்ந்து சுதேசி, பாரதி மில்கள் இன்று முதல் மூடல் புதுவை அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு


ரோடியர் மில்லை தொடர்ந்து சுதேசி, பாரதி மில்கள் இன்று முதல் மூடல் புதுவை அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Sep 2020 11:39 PM GMT (Updated: 29 Sep 2020 11:39 PM GMT)

ரோடியர் மில்லை தொடர்ந்து சுதேசி, பாரதி மில்களும் இன்று (புதன்கிழமை) முதல் மூடப்படுவதாக புதுவை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் ரோடியர், பாரதி, சுதேசி ஆகிய 3 பஞ்சு மில்கள் இயங்கி வந்தன. இந்த மில்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். ராணுவத்துக்கே சீருடைகள் தயாரித்து கொடுத்த பெருமை ரோடியர் மில்லுக்கு உண்டு. புதுவை மாநிலத்தில் பொருளாதாரத்தை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாகவும் இந்த மில்கள் விளங்கி வந்தன. ஆலை தொழிலாளர்களின் சம்பள தேதியின் போது மில்களை சுற்றிலும் வியாபாரம் களை கட்டும்.

இத்தனை சிறப்புமிக்க இந்த மில்கள் கடந்த 20 ஆண்டுகளாக நலிவடைய தொடங்கின. போதிய வருமானம் ஈட்ட முடியாமல் தள்ளாடியதால் புதிதாக தொழிலாளர்கள் சேர்க்கப்படாததாலும், ஏற்கனவே பணியில் இருந்தவர்கள் விருப்ப ஓய்வு பெற்றதாலும் மில்களின்உற்பத்தி திறன் குறைந்தது. 3 ஷிப்டுகளிலும் சுறுசுறுப்பாக பணிகள் நடந்து வந்த நிலை மாறி இந்த மில்கள் நசிய தொடங்கின.

சம்பளம் போட முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து தொழிலாளர்களுக்கு லேஆப் கொடுக்கப்பட்டது. இந்தநிலையில் மில்களை புனரமைத்து மீண்டும் வழக்கம்போல் செயல்படுத்தும் நடவடிக்கைகளை புதுவை அரசு மேற்கொண்டது. இதற்காக நிதி கோரிய போது மத்திய அரசிடம் இருந்து ஒத்துழைப்பு இல்லாமல் போனது. இதையடுத்து ஆயத்த ஆடை பூங்கா அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதுவும் பலனளிக்கவில்லை.

மூடு விழா

இதனைதொடர்ந்து ரோடியர், சுதேசி, பாரதி மில்களுக்கு அடுத்தடுத்து மூடு விழாக்கள் நடத்தப்பட்டன. அவற்றில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் மீண்டும் வேலை கேட்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு பயனில்லாமல் போனது.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோடியர் மில் மூடப்படுவதாக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த முடிவுக்கு மில் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதுகுறித்து அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறுகையில், ரோடியர் மில் மூடப்படுவதற்கான அறிவிப்பு மாநில அரசின் முடிவு இல்லை. கவர்னர் தான் இந்த முடிவை எடுத்துள்ளார். அந்த ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

அதிகாரபூர்வ அறிவிப்பு

இதற்கிடையே கடலூர் சாலையில் உள்ள பாரதி மில், மறைமலை அடிகள் சாலையில் உள்ள சுதேசி மில் ஆகியவை குறைந்த எண்ணிக்கையில் தொழிலாளர்களை கொண்டு தொடர்ந்து இயங்கி வந்தன. இந்தநிலையில் தற்போது அந்த 2 மில்களும் இன்று (புதன்கிழமை) முதல் மூடப்படுவதாக மேலாண் இயக்குனர் பிரியதர்ஷினி அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சுதேசி பாரதி ஜவுளி ஆலையின் கீழ் இயங்கும் ஸ்ரீபாரதி மில் மற்றும் சுதேசி காட்டன் மில் ஆகிய 2 ஆலைகளையும் அரசின் உத்தரவுப்படி தொழில் தகராறுகள் சட்டம் 1947 பிரிவு 25(0) படி 30.9.2020-ந் தேதி (இன்று) மாலையுடன் மூடப்படுகிறது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

இந்த உத்தரவு நேற்று 2 மில்களின் வாயிலிலும் ஒட்டப்பட்டுள்ளன.

வையாபுரி மணிகண்டன்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாநில மக்களைப் பற்றி துளியும் அக்கறையில்லை என்பதை அரசு அடிக்கடி நிரூபித்து வருகிறது. மாநில பொருளாதாரத்தின் அச்சாக இயங்கி வந்த ஏ.எப்.டி. மில்லை அரசின் நிர்வாக திறமையின்மையால் படிப்படியாக சீர்குலைத்தது. 5 ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில் மாநிலத்தில் ஒருவருக்கு கூட அரசு வேலை வழங்கவில்லை. அரசு துறைகளில் காலியாக உள்ள 9,500 பணியிடங்களை நிரப்பாமல் இளைஞர்களின் எதிர்காலத்தை அரசு சீரழித்துள்ளது.

இந்தநிலையில் பாரதி மற்றும் சுதேசி காட்டன் மில்கள் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அரசின் திறமையற்ற நிர்வாகம், தொழில் கொள்கைகளால் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. அரசு காலி பணியிடங்களையும் நிரப்பாமல், வேலைவாய்ப்பை தரும் ஏ.எப்.டி., பாரதி, சுதேசி மில்களையும் மூடி இளைஞர்கள், மாணவர்களின் எதிர்கால கனவை புதுவை அரசு சிதைத்து சீரழித்துள்ளது. அரசின் இந்த செயல்பாட்டை அ.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story