நெல்லையில் கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம்: தேவேந்திரகுல வேளாளர் அரசாணையை உடனே வெளியிட வேண்டும் ஜான்பாண்டியன் வலியுறுத்தல்


நெல்லையில் கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம்: தேவேந்திரகுல வேளாளர் அரசாணையை உடனே வெளியிட வேண்டும் ஜான்பாண்டியன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 Sep 2020 12:10 AM GMT (Updated: 30 Sep 2020 12:10 AM GMT)

தேவேந்திரகுல வேளாளர் அரசாணையை உடனே வெளியிட வேண்டும் என்று நெல்லையில் நடைபெற்ற கருஞ்சட்டை ஆர்ப்பாட்டத்தில் ஜான்பாண்டியன் வலியுறுத்தினார்.

நெல்லை,

குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளர், தேவேந்திர குலத்தான், வாதிரியார் என்ற 7 பெயர்களில் அழைக்கப்படுகிற மக்களை ‘தேவேந்திரகுல வேளாளர்‘ என அழைக்க அரசாணை வெளியிட வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கருஞ்சட்டை அணிந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 325-வது நாள் போராட்டத்தையொட்டி பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் நெல்லையப்பன், மாநில செய்தி தொடர்பாளர் சண்முகசுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசாணை

குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளர், தேவேந்திர குலத்தான், வாதிரியார் என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்ற மக்கள் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த 7 விதமாக அழைக்கப்படுகிற தங்களின் பெயர்களை ஒன்றிணைத்து ஒரே பெயரில் தேவேந்திர குல வேளாளர் என்று அழைப்பதற்கும், சாதி சான்றிதழ் பெறுவதற்கும் தமிழக அரசு உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும். இதேபோல் ஆதிதிராவிடர் பட்டியலில் இருந்து விடுவித்து வேளாண் மரபினராக அறிவிக்க வேண்டும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். உழைக்கும் மக்களாகிய இவர்களை தேவேந்திர குல வேளாளர்கள் என்று அழைக்க உடனே அரசாணை வெளியிட வேண்டும். வேளாண் தொழில் செய்வோருக்கு பெருமை சேர்க்கும் வகையில் தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும். பல்வேறு சமூகத்தினருக்கு அந்தந்த சமூகத்திற்கான மரியாதையை உடனடியாக வழங்கினார்கள். ஆனால், தேவேந்திரகுல வேளாளர் என்ற அரசாணையை வெளியிடுவதற்கு மட்டும் தாமதப்படுத்தி வருகிறார்கள். இதற்கு கமிட்டி அமைத்து இழுத்தடித்து வருகிறார்கள்.

தேர்தலில் வெளிப்படுத்துவோம்

இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த இடைத்தேர்தலை புறக்கணித்தோம். அதேபோல் எங்களது கோரிக்கையை நிறைவேற்றி தராவிட்டால், வருகிற சட்டமன்ற தேர்தலில் எங்களது நிலைப்பாட்டை பிரதிபலிப்போம். இதை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

விரைவில் தேர்தல் வருகிறது. அப்போது நமது கோரிக்கையை வென்றெடுக்க ஒற்றுமையாக திரள வேண்டும். நமது உரிமையை, கோரிக்கையை வென்றெடுக்க அனைவரும் கருப்பு சட்டை அணிய வேண்டும். நிச்சயம் தேவேந்திர குல வேளாளர் அரசாணையை வென்றெடுப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் செல்வம், நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் நாகராஜசோழன், இணைச்செயலாளர் துரைப்பாண்டியன், மாணவரணி செயலாளர் முத்துப்பாண்டி, இணைச் செயலாளர் பாலா சிவகுமார், தொண்டரணி மணிமாறன், நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் மகேஷ் மள்ளர், தென்காசி மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பாண்டியன், தலைவர் நாகராஜ் பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் விஜய பாண்டியன், மாநில பொருளாளர் அய்யாத்துரை பாண்டியன், மாநில மகளிரணி செயலாளர் நளினி மள்ளத்தி, கிங் தேவேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story