விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட வல்லம் வட்டார வேளாண் அதிகாரி உள்பட 4 பேர் கைது


விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட வல்லம் வட்டார வேளாண் அதிகாரி உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 30 Sept 2020 8:19 AM IST (Updated: 30 Sept 2020 8:19 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட வல்லம் வட்டார உதவி வேளாண் அலுவலர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்,

தமிழகத்தில் பிரதம மந்திரியின் கிசான் சம்மன் என்ற விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டத்தில் முறைகேடு செய்தவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதுடன் அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட உதவித்தொகை திரும்ப பெறப்பட்டு வருகிறது.அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டத்தில் விண்ணப்பித்தவர்களின் பட்டியலை வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதில் கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடங்கி புதிதாக சேர்க்கப்பட்ட 1 லட்சத்து 8 ஆயிரத்து 500 பேரில் இம்மாவட்டத்தை சேர்ந்த விவசாயிஅல்லாதவர்கள் 70 ஆயிரம் பேரும், இதுதவிர வெளிமாவட்டங்களை சேர்ந்த 36 ஆயிரம் பேரும் என 1 லட்சத்து 6 ஆயிரம் பேர் போலியான முறையில் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு ஒவ்வொருவரும் தங்கள் வங்கி கணக்கின் மூலம் ரூ.4 ஆயிரம் பெற்றுள்ளது தெரியவந்தது. இவர்களில் இதுவரை விவசாயி அல்லாதவர்கள் 41 ஆயிரம் பேரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.13 கோடி திரும்ப பெறப்பட்டு அரசின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

வேளாண்மைத்துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கை ஒருபுறம் இருக்க முறைகேட்டில் ஈடுபட்ட வேளாண் அலுவலர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் இவர்களுக்கு இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

அந்த வகையில் வல்லம் வட்டாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட வேளாண் உதவி அலுவலர்கள் 2 பேர் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் 7 பேர், தனியார் கணினி மைய உரிமையாளர் என இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் வல்லம் வட்டாரத்தில் உதவி வேளாண்மை அலுவலராக பணியாற்றி வந்த திண்டிவனத்தை சேர்ந்த பிரியா (வயது 32) என்பவர் முறைகேட்டில் ஈடுபட்டதும், இவருக்கு இடைத்தரகர்களாக செஞ்சி அருகே அணிலாடியை சேர்ந்த பிரிட்டோமேரி (35), ஹென்றி (32), கல்லடிக்குப்பம் ராமலிங்கம் (46) ஆகியோர் செயல்பட்டதும் தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று மடக்கிப்பிடித்தனர்.

இதையடுத்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பிரிட்டோமேரி உள்ளிட்ட 3 பேர் பேர் மூலமாக உதவி வேளாண்மை அலுவலர் பிரியா, வல்லம் வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் அல்லாத 3 ஆயிரம் பேரை இத்திட்டத்தில் முறைகேடாக சேர்த்து பணம் பெற்றிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, பிரியா உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story