கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் 10 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் 10 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Sept 2020 9:34 AM IST (Updated: 30 Sept 2020 9:34 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டம், சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் 10 பேர் தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கூகையூர் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மனைவி ராமாயி(வயது 65), மகன் ரவி(46), கணேசன் மனைவி சீராள்(45), இவரது மகன் கார்த்தி(26), மணி மனைவி மேகலா(28), மகன் கார்த்தி(3), ஆறுமுகம் மனைவி தனக்கோடி(23), மகன்கள் யோகேஷ் (3), பரணி(1), கணேசன் மகள் தர்ஷகா(2) ஆகியோர் நேற்று மாலை 6 மணிக்கு கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தனர்.

பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த கேனில் இருந்த மண்எண்ணெயை தங்கள் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களின் மீது தண்ணீரை ஊற்றி தீக்குளிக்க முயன்றதை தடுத்து நிறுத்தினர். பின்னர் ராமாயி, ரவி உள்ளிட்ட 10 பேரையும் அழைத்து சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் விசாரணை நடத்தினார். அப்போது அவரிடம் அவர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், எங்களுக்கு சொந்தமான நிலத்தை எங்கள் ஊரைச்சேர்ந்த கந்தசாமி என்பவர் சொந்தம் கொண்டாடி வருகிறார். இது சம்பந்தமான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் நிலையில் கடந்த 29-ந் தேதி அன்று குறிப்பிட்ட நிலத்தை சின்னசேலம் வருவாய்த்துறையினர் உதவியோடு அளவீடு செய்து பட்டா மாற்றம் செய்ய கந்தசாமி ஏற்பாடு செய்து வருகிறார். எனவே கோர்ட்டு தீர்ப்பு வரும்வரை நிலத்தை அளவீடு செய்யக்கூடாது என கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட சப்-கலெக்டர் இந்த பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து தீக்குளிக்க முயன்ற 10 பேர் மீதும் கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story