அம்மாபாளையம் கிராமத்தில் சாலையில் நாற்று நடும் போராட்டம்


அம்மாபாளையம் கிராமத்தில் சாலையில் நாற்று நடும் போராட்டம்
x
தினத்தந்தி 30 Sept 2020 9:54 AM IST (Updated: 30 Sept 2020 9:54 AM IST)
t-max-icont-min-icon

கழிவுநீர் கால்வாய் அமைக்கக்கோரி அம்மாபாளையம் கிராமத்தில் சாலையில் பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே அம்மாபாளையம் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இந்த காலனியில் உள்ள சில தெருக்களில் போதிய கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய் கட்டப்படாமல் உள்ளன. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் தெருக்களில் குளம் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் கொசுத்தொல்லை துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே அப்பகுதி மக்கள் தங்களுக்கு பகுதிக்கு கழிவுநீர் கால்வாய் வசதி கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று காலை சாலையில் குட்டை போல் தேங்கி உள்ள மழைநீரில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் அம்மாபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் கவிதா பிரகாஷ் கூறுகையில், ஆதிதிராவிடர் காலனி பகுதியில் உள்ள தெருக்களில் போதிய கழிவுநீர் மற்றும் மழை நீர் வடிகால் வசதி இல்லை. இதனால் தெருக்களில் ஆங்காங்கே மழை மற்றும் கழிவுநீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. எங்கள் பகுதிக்கு கழிவு நீர் கால்வாய் கட்டித்தர கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் கட்டித் தரவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர். இதன் பிறகாவது எங்கள் பகுதிக்கு கழிவுநீர் கால்வாய் அமைத்து தர ஊராட்சி நிர்வாகம் முன் வரவேண்டும் என்றார்.

Next Story