குன்னம் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - விளையாடுவதற்கு, அண்ணன் செல்போன் தராததால் விபரீத முடிவு


குன்னம் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - விளையாடுவதற்கு, அண்ணன் செல்போன் தராததால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 30 Sep 2020 7:15 AM GMT (Updated: 30 Sep 2020 5:48 AM GMT)

குன்னம் அருகே விளையாடுவதற்கு, அண்ணன் செல்போன் தராததால் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கல்லை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருடைய மனைவி கவுரி. இந்த தம்பதிக்கு பிரவீன்குமார், நவீன் என 2 மகன்கள் மற்றும் தீபிகா(வயது 12) என்ற மகள் இருந்தார். சுரேஷ்குமார் குவைத் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். கல்லை கிராமத்தில் கவுரி தனது பிள்ளைகளுடன் வசிக்கிறார்.

பிரவீன்குமார் பிளஸ்-2 வகுப்பும், நவீன் பிளஸ்-1 வகுப்பும் படித்து வருகின்றனர். தீபிகா, கல்லை கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், இணையவழி (ஆன்லைன்) வகுப்புகள் நடைபெற்று வருகிறது. வீட்டில் உள்ள ஒரு செல்போனை பயன்படுத்தி பிரவீன்குமார், நவீன் ஆகியோர் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தீபிகா, விளையாடுவதற்காக செல்போனை கேட்டுள்ளார். ஆனால் பிரவீன்குமார் செல்போனை தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரவீன்குமாருக்கும், தீபிகாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த தீபிகா வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்று மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு கொண்டார்.

சிறிது நேரத்தில் கவுரி மாடி அறைக்கு சென்று பார்த்தபோது, தீபிகா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து தீபிகாவை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தீபிகா உயிரிழந்தார். இது குறித்து கவுரி, குன்னம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சாவித்திரி வழக்குப்பதிவு செய்து தீபிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

செல்போனை விளையாட தராததால் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story