திருச்சி தற்காலிக காய்கறி சந்தையில் 42 கடைகளின் கூரை சரிந்து விழுந்தது வியாபாரிகள், பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்


திருச்சி தற்காலிக காய்கறி சந்தையில் 42 கடைகளின் கூரை சரிந்து விழுந்தது வியாபாரிகள், பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 30 Sep 2020 6:24 AM GMT (Updated: 30 Sep 2020 6:24 AM GMT)

திருச்சி தற்காலிக காய்கறி சந்தையில் ஒரே நேரத்தில் 42 கடைகளின் மேற்கூரைகள் சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வியாபாரிகள், பொதுமக்கள் காயமின்றி உயிர் தப்பினார்கள்.

திருச்சி,

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக திருச்சி காந்தி மார்க்கெட்டில் மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரம் கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி முதல் தடை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து காந்தி மார்க்கெட்டில் நடைபெற்று வந்த மொத்த வியாபாரம் பொன்மலை ஜி கார்னர் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

சில்லறை விற்பனைக்காக திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானம், காஜாமலை அண்ணா விளையாட்டு அரங்கத்தின் முன் பகுதி, ஜோசப் கல்லூரி மைதானம், இ.ஆர்.மேல்நிலைப்பள்ளி வளாகம் உள்ளிட்ட 8 இடங்கள் ஒதுக்கப்பட்டன. தற்போது இந்த இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தைகளில் வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகிறார்கள்.

திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகில் உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக காய்கறி சந்தையில் 53 கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. வியாபாரிகள் வியாபாரம் செய்வதற்கு வசதியாக ஒரு வரிசையில் 42 கடைகளும், இன்னொரு வரிசையில் 11 கடைகளும் கம்பு ஊன்றி தகர கொட்டகை அமைத்து கொடுக்கப்பட்டிருந்தது. இவற்றில் வியாபாரிகள் தினமும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வியாபாரம் செய்து வருகிறார்கள். நேற்று காலை 11 மணி அளவில் வியாபாரிகள் வழக்கம்போல் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென ஒரு வரிசையில் இருந்த 42 கடைகளின் தகரத்தால் ஆன மேற்கூரைகளும் அப்படியே சரிந்து விழுந்தது.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காய்கறிகள் வாங்குவதற்கு வந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அலறியடித்து ஓடினார்கள். தகர கொட்டகை அப்படியே பின்பகுதியில் சரிந்து விழுந்ததால் பொருட்கள் வாங்க வந்த பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் அதிர்ஷ்டவசமாக சிறு காயம் கூட ஏற்படவில்லை. முன் பகுதியில் சரிந்து விழுந்து இருந்தால் தகரம் வெட்டி பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.

திருச்சியில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் பெய்த மழையின் காரணமாக தகர கொட்டகை சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து வியாபாரிகள் கடைகளைப் போட்டுவிட்டு மைதானத்தில் திரண்டு நின்றனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, பொருளாளர் ஹக்கீம், காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் கமலக்கண்ணன் மற்றும் வியாபார சங்க பிரமுகர்கள் அங்கு வந்தனர்.

அவர்கள் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக இங்கு வந்து சரிந்து விழுந்த தகரக் கொட்டகைகளில் சீரமைத்து தரவேண்டும், வியாபாரிகளின் உயிருக்கும், உடைமைக்கும் மாநகராட்சி பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வருவதற்கு சிறிது தாமதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து வியாபாரிகள் மெயின் ரோட்டுக்கு வந்து மாநகராட்சிக்கு எதிராக சிறிதுநேரம் கோஷம் போட்டார்கள். இதற்கிடையே மாநகராட்சி கோ அபிஷேகபுரம் கோட்ட உதவி ஆணையர் வினோத், உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவன்ராம் ஆகியோர் அங்கு வந்து போராட்டம் நடத்திய வியாபாரிகள் சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது வியாபாரிகள் தரப்பில் சரிந்து விழுந்த தகரக் கொட்டகைகளை இன்று (அதாவது நேற்று) இரவுக்குள் மாநகராட்சி நிர்வாகம் சீரமைத்து தர வேண்டும். மீண்டும் பலத்த மழையினால் அல்லது காற்றினாலும் சரிந்து விழாத வகையில் தரமாக அவற்றை செம்மைப்படுத்தி தரவேண்டும். இல்லை என்றால் நாளை (இன்று) காலை முதல் உழவர் சந்தைக்குள் புகுந்து காந்தி மார்க்கெட் வியாபாரிகள் வியாபாரம் செய்யத் தொடங்குவார்கள் என்று கூறினார்கள். இதனை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் உடனடியாக தற்காலிக கடைகளை தரமாக சீரமைத்து தருவதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் தற்காலிக காய்கறி சந்தை வைக்கப்பட்டுள்ள இடத்தில் வியாபாரிகளுக்கு குடிநீர் வசதியும், இரவில் மின் விளக்கு வசதி செய்து தருவதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

Next Story