குத்தாலம் பேரூராட்சி பகுதியில் குப்பைத்தொட்டியில் கிடந்த வெள்ளி கிரீடம் - கோவில் நிர்வாகியிடம் ஒப்படைத்த தூய்மைப்பணியாளருக்கு பாராட்டு


குத்தாலம் பேரூராட்சி பகுதியில் குப்பைத்தொட்டியில் கிடந்த வெள்ளி கிரீடம் - கோவில் நிர்வாகியிடம் ஒப்படைத்த தூய்மைப்பணியாளருக்கு பாராட்டு
x
தினத்தந்தி 30 Sep 2020 11:30 AM GMT (Updated: 30 Sep 2020 11:24 AM GMT)

குத்தாலம் பேரூராட்சி பகுதியில் குப்பைத் தொட்டியில் கிடந்த வெள்ளி கிரீடத்தை தூய்மைப்பணியாளர் எடுத்து கோவில் நிர்வாகியிடம் ஒப்படைத்தார். அவரது இந்த செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

குத்தாலம்,

மயிலாடுதுறையை அடுத்துள்ள குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிபவர் சித்ரா. இவர் நாள்தோறும் குத்தாலம் பேரூர் பகுதிகளில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். வழக்கம்போல் இவர் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.

குத்தாலம் பஞ்சுகார செட்டித் தெருவில் உள்ள குப்பைத்தொட்டியில் குப்பையை சேகரித்தார். அப்போது குப்பை தொட்டிக்குள் இருந்த குப்பையோடு வெள்ளி கிரீடம் இருப்பதை சித்ரா கண்டார். இதனையடுத்து அந்த கிரீடத்தை எடுத்துச்சென்று அருகில் இருந்தவர்களிடம் காட்டி விசாரணை செய்தார்.

விசாரணையில் அந்த வெள்ளி கிரீடம் பஞ்சர செட்டி தெருவில் உள்ள தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு சொந்தமானது என்றும், சாமி தலையில் இருந்த வெள்ளி கிரீடம் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து தூய்மைப் பணியாளர் சித்ரா, அந்த கிரீடத்தை தண்டாயுதபாணி சாமி கோவில் நிர்வாகி முத்துக்குமரனிடம் ஒப்படைத்தார்.

இதுகுறித்து கோவில் நிர்வாகி கூறுகையில், கோவிலில் உள்ள சாமி கழுத்தில் உள்ள மாலைகளை சுத்தம் செய்து குப்பைத் தொட்டியில் போடும்போது கிரீடமும் குப்பைத் தொட்டிக்கு சென்றதாக கூறினார். குத்தாலம் பேரூராட்சி தூய்மை பணியாளர் சித்ராவின் நேர்மையான இந்த செயலை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் பலரும் சித்ராவை பாராட்டி வருகின்றனர்.

Next Story