புதுச்சத்திரம் அருகே, லாரிகள் மோதல்; சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் காயம்


புதுச்சத்திரம் அருகே, லாரிகள் மோதல்; சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் காயம்
x
தினத்தந்தி 30 Sept 2020 8:00 PM IST (Updated: 30 Sept 2020 8:21 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சத்திரம் அருகே லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்திற்கு உள்ளானதில், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.

நாமக்கல், 

பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு பஞ்சு மெத்தை லோடுடன் மினி லாரி ஒன்று, சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றது. இந்த லாரியை திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரை சேர்ந்த டிரைவர் மணிகண்டன் ஓட்டி சென்றார். இதனிடையே நேற்று அதிகாலை அந்த மினி லாரி, புதுச்சத்திரம் அருகே பாச்சல் அடுத்துள்ள தனியார் கல்லூரி முன்பு இருக்கும் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது.

அப்போது ஏற்கனவே முன்னால் சென்று கொண்டிருந்த டாரஸ் லாரி திடீரென நின்றதாக கூறப்படுகிறது. அதனால் மினி லாரி, டாரஸ் லாரியின் மீது மோதியது. இதனால் மினி லாரியின் முன்புறம் சேதமடைந்தது. இதில் டிரைவர் மணிகண்டனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதோடு, இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டார். இந்தநிலையில் விபத்துக்கு காரணமான அந்த டாரஸ் லாரி நிற்காமல் சென்று விட்டது.

விபத்து குறித்து தகவல் அறிந்து புதுச்சத்திரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், காவலர் பார்த்திபன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் மணிகண்டனை இடிபாடுகளுக்குள் இருந்து மீட்டு, ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக தனியார் ஆம்புலன்சில் ஏற்றினர்.

அப்போது சேலத்தில் இருந்து நெல்லைக்கு சென்ற தனியார் பார்சல் நிறுவனத்தின் மினி லாரி, ஏற்கனவே விபத்துக்கு உள்ளாகி நின்று கொண்டிருந்த மினி லாரியின் மீது வேகமாக மோதியது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ஆம்புலன்ஸ் டிரைவர் பெரியசாமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும் போலீஸ்காரர் பார்த்திபன், பார்சல் நிறுவன லாரி டிரைவர் சீனிவாசனுக்கும் காயம் ஏற்பட்டது.

விபத்தில் படுகாயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். டிரைவர்கள் மணிகண்டன், பெரியசாமி, சீனிவாசன் ஆகியோர் நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story