பெருமாநல்லூர் அருகே, ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது
பெருமாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெருமாநல்லூர்,
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள கருக்கங்காட்டுபுதூரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 75) விவசாயி. சம்பவத்தன்று பழனிச்சாமி தனது வீட்டின் முன்பாக தனது ஆட்டை மேயவிட்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம வாலிபர்கள் அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை தூக்கிச்சென்றனர்.
இதுதொடர்பாக பழனிச்சாமி பெருமாநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடுகளை திருடிச்சென்றவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் ஆடு திருடியவர்கள் கருக்கங்காட்டுப்புதூரிலேயே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பெருமாநல்லூர் போலீசார் அங்கு பதுங்கி இருந்த 2 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் ஆடு திருடிய இருவரும், கூடலூரை சேர்ந்த ஷாஜகான் (22), நீலகிரியை சேர்ந்த சீனோய்பேபி (23) என்பது தெரியவந்தது.
இருவரும் பட்டதாரி வாலிபர்கள் என்பதும், திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே அறை எடுத்து தங்கி இருந்ததும், வேலை இல்லாத காரணத்தால் ஆடு திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து ரூ.8ஆயிரம் மதிப்புள்ள ஆடு மற்றும் ஆடு திருட பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story