கோவில்பட்டியில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்


கோவில்பட்டியில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 30 Sep 2020 11:49 PM GMT (Updated: 30 Sep 2020 11:49 PM GMT)

கோவில்பட்டியில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி,

எட்டயபுரம் அருகே உள்ள சுரைக்காய்பட்டி ஊராட்சி ரணசூரநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு பகுதி மக்கள் நேற்று காலை விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ரவீந்திரன் தலைமையில் கோவில்பட்டி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் அலுவலகத்துக்குள் சென்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கிராம மக்களிடம், தனி வட்டாட்சியர் ராமசுப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கிராம மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் 50 குடும்பங்களுக்கு பட்டா வழங்குவதாக உறுதி அளித்துவிட்டு, சுமார் 25 குடும்பங்களுக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டுள்ளது.

பட்டா வழங்க...

இந்த பட்டாக்கள் வழங்கப்பட்டு 4 ஆண்டுகள் கடந்த பின்னரும் இதுவரை இதற்கான இடத்தை அடையாளம் காட்டி அளந்து தரவில்லை. எனவே பட்டா வழங்கப்பட்டவர்களுக்கு நிலத்தை அளந்து கொடுத்து ஒப்படைக்க வேண்டும். பட்டா கிடைக்க பெறாதவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

பட்டா வழங்கப்பட்டவர்களுக்கு 10 நாட்களுக்குள் நிலத்தை அளந்து தர நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக பட்டா கேட்டவர்களுக்கு, இடங்கள் தேர்வு செய்த பின்னர் வழங்கப்படும் என்று தனி வட்டாட்சியர் ராமசுப்பு உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், கட்டுமான சங்க நகர செயலாளர் அந்தோணி செல்வம் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Next Story