வீடுகளை இடிக்கப்போவதாக அதிகாரிகள் மிரட்டல் கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார்


வீடுகளை இடிக்கப்போவதாக அதிகாரிகள் மிரட்டல் கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார்
x
தினத்தந்தி 1 Oct 2020 7:21 AM IST (Updated: 1 Oct 2020 7:21 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே 50 ஆண்டுகளாக வசிக்கும் 30 குடும்பங்களின் வீடுகளை இடிக்கப்போவதாக அதிகாரிகள் மிரட்டுவதாக கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகேயுள்ள அகரம் பேரூராட்சி லட்சுமணம்பட்டி கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில், லட்சுணம்பட்டி நால்ரோடு பகுதியில் 30 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகிறோம். அந்த பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கிறோம். இதற்காக வீட்டுவரி செலுத்துகிறோம். மேலும் மின்சார இணைப்பு பெற்று உரிய கட்டணம் செலுத்தி வருகிறோம். அதோடு நாங்கள் குடியிருக்கும் முகவரியை கொண்டு ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவை பெற்றுள்ளோம். இந்த நிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து, நாங்கள் குடியிருக்கும் வீட்டை காலிசெய்யும்படி வற்புறுத்துகின்றனர். அதோடு காலி செய்ய மறுத்தால், பொக்லைன் எந்திரம் மூலம் வீட்டை இடித்து விடுவதாவும் மிரட்டுகின்றனர்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பதால், லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து வீடு கட்டி இருக்கிறோம். அத்தகைய வீடுகளை இடித்து விட்டு எங்களை அப்புறப்படுத்தினால், எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். எனவே, நாங்கள் அங்கேயே தொடர்ந்து வசிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும். மேலும் எங்களை காலி செய்யக்கூடாது என்று வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். அதோடு 50 ஆண்டுகளாக வசிக்கும் எங்களுக்கு பட்டா வழங்கவும் உத்தரவிட வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்ப்புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சின்னகருப்பன், மத்திய மண்டல செயலாளர் மருதை திருவாணன், துணை செயலாளர் கலைவேந்தன், கொள்கை பரப்பு செயலாளர் சங்கத்தமிழன் மற்றும் பழனி அருகேயுள்ள பாப்பம்பட்டியை அடுத்த வடக்கு தாதநாயக்கன்பட்டியை சேர்ந்த கிராம மக்கள், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த 100 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். அதில் 45 குடும்பத்தினருக்கு மட்டும் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. மீதமுள்ள நபர்களுக்கு பட்டா வழங்கவில்லை. மேலும் குடியிருப்பு தவிர மீதமுள்ள இடத்தை விளையாட்டு மைதானமாகவும், பொதுநிகழ்ச்சிகள் நடத்தவும் பயன்படுத்துகிறோம். இந்த நிலையில் அங்கு வேறுசமூகத்தினருக்கு வீட்டுமனை பட்டா வழங்க முயற்சி நடக்கிறது. இதனால் பிரச்சினைகள் ஏற்படுமோ? என்ற அச்சம் நிலவுகிறது. எனவே, எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

Next Story