புதுவையில் 6 மாதங்களுக்குப்பின் மது பார்கள் மீண்டும் திறப்பு மதுபிரியர்கள் மகிழ்ச்சி


புதுவையில் 6 மாதங்களுக்குப்பின் மது பார்கள் மீண்டும் திறப்பு மதுபிரியர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 2 Oct 2020 4:22 AM IST (Updated: 2 Oct 2020 4:22 AM IST)
t-max-icont-min-icon

புதுவை மாநிலத்தில் 6 மாதங்களுக்குப்பின் மது பார்கள் மீண்டும் நேற்று திறக்கப்பட்டதால் மதுபிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

புதுச்சேரி,

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து கடந்த மார்ச் மாதம் இறுதி வாரம் முதல் புதுவையில் அனைத்து மதுக்கடைகளும், பார்களும் மூடப்பட்டன. அதன்பின் அடுத்தடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதன்படி கடந்த மே மாதம் 25-ந் தேதி முதல் கூடுதலாக கொரோனா வரி விதிக்கப்பட்டு மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் அப்போது பார்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

தமிழகத்திற்கு நிகராக புதுவையில் மதுபாட்டில்களில் விலை உயர்ந்ததால் மதுபிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். குறைந்த விலையில் உயர்தர மது கிடைக்கும் என்ற ஆர்வத்தில் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் புதுவைக்கு வருவது உண்டு. ஆனால் மது வகைகளின் விலைஉயர்வு காரணமாக மது விற்பனை தற்போது கணிசமாக குறைந்து விட்டது. இதனால் அரசுக்கு முன்பு இருந்ததைவிட எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் கிடைக்காமல் போனது.

பார்கள் திறப்பு

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஊரடங்கில் மேலும் பல தளர்வுகளை அளித்து வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்தது. அதில், மதுபார்களை திறக்கலாம் என தெரிவித்து இருந்தது. அந்தவகையில் புதுவை மாநிலத்தில் பார்களை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ளது.

அதன்படி நேற்று முதல் புதுவையில் பார்கள் திறக்கப்பட்டன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பார்களில் உள்ள டேபிள்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. வாடிக்கையாளர்களுக்காக சானிடைசர் வைக்கப்பட்டு இருந்தது. 6 மாத இடைவெளிக்குப்பின் பார்கள் திறக்கப்பட்டதையடுத்து மதுபிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மதுபார்களுக்கு சென்று தனிமனித இடைவெளி விட்டு அமர்ந்து மது குடித்தனர். ‘மது வகைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கோவிட் வரியை அரசு ரத்து செய்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்’ என்று அவர்கள் தெரிவித்தனர்.

Next Story