கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Oct 2020 5:28 AM IST (Updated: 2 Oct 2020 5:28 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி,

ஓய்வூதியர்களுக்கு தாமதமின்றி மருத்துவ பில்களை பட்டுவாடா செய்ய வேண்டும். ரெயிலில் மூத்த குடிமக்களுக்கு ரத்து செய்யப்பட்ட கட்டண சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கான 4ஜி டெண்டர் ரத்து செய்யப்பட்டதை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியர் சங்க கிளை தலைவர் சி.மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட உதவி செயலாளர் சுப்பையா, கோலப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் முத்துராமலிங்கம் வரவேற்றார். அகில இந்திய உதவி தலைவரும், தமிழ் மாநில உதவி தலைவருமான எஸ்.மோகன்தாஸ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் ஏராளமான பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில், கிளை பொருளாளர் திருவட்டபோத்தி நன்றி கூறினார்.

பொதுத்துறை ஓய்வூதியர்கள்

கோவில்பட்டியில் மத்திய, மாநில பொதுத்துறை ஓய்வூதியர்களின் தமிழ் மாநில ஒருங்கிணைப்பு குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க வட்ட தலைவர் வி.முருகன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் எம்.ராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர்கள் என்.முனியாண்டிசாமி, பொன்.பரமானந்தம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் திரளான ஓய்வூதியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். வட்ட பொருளாளர் ஏ.ராமச்சந்திரன் நன்றி கூறினார். ஓய்வூதியத்தை தனியார் மயமாக்க கூடாது. மருத்துவ வசதி, தூய்மையான குடிநீர், சுகாதாரமான உணவு, தரமான போக்குவரத்து என ஓய்வு நேர நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story