ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டம் ஜோதிமணி எம்.பி. கைது


ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டம் ஜோதிமணி எம்.பி. கைது
x
தினத்தந்தி 2 Oct 2020 11:18 AM IST (Updated: 2 Oct 2020 11:18 AM IST)
t-max-icont-min-icon

ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஜோதிமணி எம்.பி. உள்பட கட்சி நிர்வாகிகள் கைது செய்யனர்.

கரூர்,

உத்தரபிரதேசத்தில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமையால் இறந்த மனீஷாவின், பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூற சென்ற ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து, கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று மாலை கோவை ரோட்டில் உள்ள ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு கரூர் ஜோதிமணி எம்.பி. தலைமையில், மாவட்ட தலைவர் சின்னசாமி, மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் லியோசதீஷ் உள்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஒன்று திரண்டனர்.

பின்னர் உத்தரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் உருவபொம்மையை காலால் மிதித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் உருவபொம்மையை தீயிட்டு கொளுத்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தீயில் எரிந்த உருவ பொம்மை மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

இதனையடுத்து ஜோதிமணி எம்.பி. உள்பட காங்கிரஸ் கட்சியினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாமல் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் மறியலை தொடர்ந்தனர். இதையடுத்து ஜோதிமணி எம்.பி. உள்பட 13 காங்கிரஸ் நிர்வாகிகளை கைது செய்து, போலீசார் பஸ்சில் ஏற்ற முயன்றனர்.

இருப்பினும் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் பஸ்சின் படிக்கட்டு முன்பு அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கரூர்-கோவை சாலையில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனையடுத்து ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, வலுகட்டாயமாக போலீஸ் வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன், தலைமையில் கரூர் காமராஜர் சிலை அருகில் 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story