சிவமொக்காவில் பரபரப்பு: தொடர் பலாத்காரத்தால் கர்ப்பமான மைனர் பெண் தற்கொலை; பெரியப்பா மகன் கைது


சிவமொக்காவில் பரபரப்பு:  தொடர் பலாத்காரத்தால் கர்ப்பமான மைனர் பெண் தற்கொலை; பெரியப்பா மகன் கைது
x
தினத்தந்தி 3 Oct 2020 6:12 AM IST (Updated: 3 Oct 2020 6:12 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்காவில் தொடர் பலாத்காரத்தால் கர்ப்பமான மைனர்பெண் வேதனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சிவமொக்கா,

சிவமொக்காவில் தொடர் பலாத்காரத்தால் கர்ப்பமான மைனர்பெண் வேதனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக அவரது பெரியப்பா மகனை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகா ரிப்பன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 16 வயது மைனர் பெண். இவருடைய பெற்றோர் கூலி தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் தினமும் வேலைக்காக சென்று விடுவார்கள். இதனால் மைனர்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருப்பார். இந்த நிலையில், மைனர்பெண்ணின் பக்கத்து கிராமமான சங்கராபுராவை சேர்ந்தவர் ராகவேந்திரா (வயது 24). இவர் மைனர்பெண்ணின் அண்ணன் ஆவார். அதாவது, ராகேவந்திரா மைனர் பெண்ணின் பெரியப்பாவின் மகன்.

இதனால், ராகவேந்திரா அடிக்கடி மைனர்பெண்ணின் வீட்டுக்கு வந்து செல்வார். அண்ணன் என்பதால் மைனர்பெண்ணும் அவருடன் சகஜமாக பழகி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மைனர்பெண்ணின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர். இதனால் மைனர்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த ராகவேந்திரா, மைனர்பெண்ணிடம் தவறாக நடந்துள்ளார். தங்கை என்றும் கூட பாராமல் ராகவேந்திரா அவரை வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக தெரிகிறது. இதையடுத்து இதுபற்றி வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக ராகவேந்திரா மிரட்டி உள்ளார். இதனால் பயந்துபோன அந்த மைனர்பெண், இதுபற்றி வெளியே யாரிடமும் கூறவில்லை.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட ராகவேந்திரா, மைனர்பெண்ணின் பெற்றோர் வேலைக்கு சென்ற சமயத்தில், அங்கு சென்று மைனர்பெண்ணை தொடர்ந்து மிரட்டி கற்பழித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதன்காரணமாக மைனர்பெண் கர்ப்பமானார். இதனால் மைனர்பெண் அதிர்ச்சி அடைந்தார். மேலும் தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே யாரிடமும் சொல்ல முடியாமல் அவர் தவித்து வந்தார். தான் கர்ப்பமாக இருப்பது வெளியே தெரிந்தால் குடும்பத்துக்கே அவமானம் என கருதிய மைனர்பெண் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மைனர்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் வேலைக்கு சென்ற அவருடைய பெற்றோர் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.

அப்போது மைனர்பெண் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தங்களது மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும், ரிப்பன்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், மைனர்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, மைனர்பெண்ணின் வீட்டில் இருந்து அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று போலீசார் வசம் சிக்கியது. அந்த கடிதத்தில், ‘பெரியப்பாவின் மகன் ராகவேந்திரா என்னை பலமுறை வலுக்கட்டாயமாக கற்பழித்தார். வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதால் நான் இதுபற்றி வெளியே கூறவில்லை. இதனால் நான் கர்ப்பம் ஆனேன். இது வெளியே தெரிந்தால் எனது பெற்றோருக்கு அவமானம் ஆகிவிடும். இதனால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள்’ என்று எழுதி இருந்தார்.

இந்த நிலையில், மைனர்பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையும் போலீசாருக்கு கிடைத்தது. அதில், மைனர்பெண் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மைனர்பெண்ணின் பெற்றோர், ரிப்பன்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகவேந்திராவை கைது செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மைனர்பெண்ணை அண்ணனே கற்பழித்து கர்ப்பமாக்கியதும், அவமானத்தால் மைனர்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story