கீரனூர் அருகே உயிர்பலி வாங்க காத்திருக்கும் பள்ளிக்கட்டிடம்


கீரனூர் அருகே உயிர்பலி வாங்க காத்திருக்கும் பள்ளிக்கட்டிடம்
x
தினத்தந்தி 4 Oct 2020 6:30 AM IST (Updated: 4 Oct 2020 6:30 AM IST)
t-max-icont-min-icon

கீரனூர் அருகே உயிர்பலி வாங்கும் வகையில் பள்ளி கட்டிடம் பழுதடைந்து காணப்படுகிறது.

கீரனூர்,

தொப்பம்பட்டி ஒன்றியம் ராஜாம்பட்டி ஊராட்சி சங்கம்பாளையத்தில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் விவசாயத்தையே நம்பி உள்ளனர். மேலும் கூலிவேலையும் செய்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது.

ஓடுகளால் ஆன அந்த பள்ளி கட்டிடம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அப்பள்ளிக்கு மாணவ-மாணவிகள் அச்சத்துடனேயே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பெற்றோர், தங்களது குழந்தைகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி வருகின்றனர். இதனால் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு 60 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. தனியாரால் நிர்வகிக்கப்பட்ட இந்த பள்ளி, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்பள்ளியில் 25 பேர் படித்து வருகின்றனர். போதிய பராமரிப்பு இல்லாததால் கட்டிடத்தின் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

பள்ளிக்கட்டிடத்தின் மேற்கூரையும் சேதமடைந்துள்ளது. பள்ளி வளாகத்தில் புதர்மண்டி காணப்படுவதால் விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயிர்ப்பலி வாங்க காத்திருப்பதை போல பள்ளிக்கட்டிடம் உள்ளது. எனவே பள்ளியை திறப்பதற்கு முன்பு கட்டிடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

Next Story