6 மாதங்களுக்கு பிறகு பெங்களூரு இஸ்கான் கோவில் நாளை திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
6 மாதங்களுக்குப் பிறகு, பெங்களூரு இஸ்கான் கோவில் நாளை (திங்கட்கிழமை) முதல் திறக்கப்படுகிறது.
பெங்களூரு,
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கோவில்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து கோவில் உட்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டிருந்தன.
இந்த நிலையில் மத்திய அரசு ஊரடங்கில் தளர்வுகள் செய்து கடந்த ஜூலை மாதம் முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளித்திருந்தது. ஆனால் ஒரு சில கோவில்கள் இன்னும் திறக்கப்படவில்லை.
அதுபோல பெங்களூருவில் உள்ள பிரசித்தி பெற்ற இஸ்கான் கோவிலும் திறக்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் இஸ்கான் கோவிலை மீண்டும் திறக்க கோவில் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி வருகிற 5-ந்தேதி (நாளை) முதல் திறக்கப்பட உள்ளது.
இதுகுறித்து இஸ்கான் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பெங்களூரு இஸ்கான் கோவில் வருகிற 5-ந் தேதி (நாளை) முதல் திறக்கப்படுகிறது. திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9.30 மணியில் இருந்து மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். 10 வயதுக்கு கீழே உள்ளவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கை மற்றும் கால்களில் சானிடைசர் திரவம் தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்படும். தேவைப்படுபவர்களுக்கு மட்டும் லிப்ட் இயக்கப்படும். பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே கோவிலில் நடக்கும் பூஜைகளை www.isk-conbangalore.org என்ற இணையதளத்தில் கண்டுகளிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story