தா.பழூர் அருகே, மாட்டு வண்டிக்காரர்கள் சாலை மறியல் - மணல் அள்ள பணம் வாங்கிக்கொண்டு, வண்டிகளை பறிமுதல் செய்வதாக குற்றச்சாட்டு


தா.பழூர் அருகே, மாட்டு வண்டிக்காரர்கள் சாலை மறியல் - மணல் அள்ள பணம் வாங்கிக்கொண்டு, வண்டிகளை பறிமுதல் செய்வதாக குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 6 Oct 2020 10:15 AM IST (Updated: 6 Oct 2020 10:12 AM IST)
t-max-icont-min-icon

தா.பழூர் அருகே மாட்டு வண்டிக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மணல் அள்ள பணம் வாங்கிக்கொண்டு, வண்டிகளை பறிமுதல் செய்வதாக வருவாய்த்துறையினர், போலீசார் மீது குற்றம்சாட்டினர்.

தா.பழூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அண்ணங்காரம்பேட்டை ஜூப்லி ரோட்டில் இடங்கண்ணி கிராம நிர்வாக அதிகாரி தினேஷ் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது நேற்று அதிகாலை 5 மணி அளவில் தேவமங்கலம் கிராமத்தை சேர்ந்த அறிவழகன்(வயது 35), ராஜேந்திரன்(55), சதீஷ்குமார்(22), பன்னீர்செல்வம்(40), உதயநத்தம் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி(50) ஆகியோர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. கிராம நிர்வாக அதிகாரியை பார்த்ததும், அவர்கள் மாடுகளை அவிழ்த்து கொண்டு மாட்டு வண்டியை மணலுடன் அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி தினேஷ், தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் மாட்டு வண்டி ஓட்டி வந்த அறிவழகன் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து சிலால் கிராமத்தில் தா.பழூர் - ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் - அணைக்கரை சாலைகள் சந்திக்கும் நால்ரோடு பகுதியில் மாட்டு வண்டிக்காரர்கள் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். வருவாய் துறையினர் மற்றும் போலீசார் பணம் வாங்கிக்கொண்டு ஆற்று மணல் எடுக்க அனுமதிப்பதாகவும், பின்னர் வழக்குப்பதிவு செய்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்வது மிகுந்த வேதனை அளிப்பதாகவும் மாட்டு வண்டிக்காரர்கள் கூறி, அதனை கண்டித்து இந்த மறியலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். மேலும் கொள்ளிடம் ஆற்றின் கரையில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள தமிழக அரசு மணல் குவாரி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. கும்பகோணத்தில் இருந்து சென்னை, பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் துணை சூப்பிரண்டு தேவராஜ், தாசில்தார் கலைவாணன் ஆகியோர் மாட்டுவண்டிக்காரர்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர்.

மேலும் சிலால் கிராமத்தில் சட்டவிரோதமாக சாலை மறியலில் ஈடுபட்டதாக தேவாமங்கலம் கிராமத்தை சேர்ந்த மாட்டு வண்டிக்காரர்கள் இளையராஜா(33), அறிவழகன்(35), ராஜேந்திரன்(55), சதீஷ்குமார், பன்னீர்செல்வம்(40) ஆகியோர் மீது அணைகுடம் கிராம நிர்வாக அதிகாரி அனிதா, தா.பழூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் நோய்த்தொற்று ஏற்படுத்தும் வகையில் கூட்டமாக கூடியதாகவும், 144 தடையை மீறி சட்டவிரோதமாக கூடியதாகவும் 5 பேர் மீதும், தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story